விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Sunday, 11 March 2012

கூடங்குளம்:உறுதிப் பயணமா? இறுதி பயணமா?

தமிழக வரலாற்றிலேயே மிகவும் உறுதிமிக்க போராட்டம் கூடங்குளம் போராட்டம்தான் என்றால் அது மிகையில்லை.இந்த உறுதிக்கு காரணம் இப்போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்தான்.இம்மக்கள் இப்போராட்டத்தில் உறுதியாக ஈடுபடுவதற்குக்காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் அறிவுபூர்வமாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளதுதான்.இப்படிப்பட்ட போராட்டம் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதாக இப்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது.





இப்படி பேசுவதற்கும் ,விவாதிப்பதற்கும்  தமிழக அரசு இப்போராட்டம் குறித்து, இதுநாள் வரை தான் கடைபிடித்துவந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்ளப்போகிறது என்பதைக் காரணமாகக் கூறுகிறார்கள். தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கையும் அதனைத் தொடர்ந்து கூடங்குளம் பகுதியில் ஆளும் கட்சியினர் மக்கள் மத்தியில் தற்போது செய்துவரும் பிரச்சாரமும் இதற்கான ஆதாரமாக காட்டப்படுகிறது.




மேற்கண்ட இரு அம்சங்களும் தமிழக அரசு கூடங்குளம் போராட்டத்தில் இதுநாள்வரை, தான் கடைபிடித்துவந்த அணுகுமுறையின் - நாடகத்தின் - இறுதிக்கட்டத்தை காட்டுகிறதே தவிர, இவைகள் கூடங்குளம் மக்களின் அணு உலைக்கெதிரான போராட்டத்தின் இறுதி நிலையைக் காட்டவில்லை.தமிழக அரசு தனது நாடகத்தை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பதையே, போராட்டத்தின் முடிவாக சித்தரிக்கிறார்கள்.

கூடங்குளம் மக்கள் அணு உலைக்கெதிரான தமது போராட்டத்தை தமிழக அரசின் பிரதிநிதியாக இருந்து-கூலி ஆட்களாக இருந்து - நடத்தவில்லை.இப்போராட்டத்திற்கு தமிழ அரசு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நேரடியாகவோ,மறைமுகமாகவோ ஆதரவளிக்கவில்லை.”கூடங்குளம் மக்களின் அச்சம் போக்கப்படும் வரை அணுமின்நிலையத்தை மத்திய அரசு திறக்கக்கூடாது ”, என்ற தமிழக அரசின் நிலைப்பாடே ,இப்போராட்டத்தை நேரடியாக அது எதிர்க்கவில்லை,ஆனால் இந்த நிலைப்பாட்டின் உள்ளே மக்கள் போராட்டத்திற்கு எதிரான தன்மையையே கொண்டிருக்கிறது.
தமிழக அரசு ”மக்களின் அச்ச உணர்வு”, என்று கூறுவதன் மூலம் தான் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாளன் இல்லை என்பதை உணர்த்துகிறது.ஏனென்றால் கூடங்குளம் மக்கள் அணு உலைக்கெதிராக ஊகத்தின் அடிப்படையிலான அச்சத்தை கொண்டிருக்கவில்லை.விஞ்ஞான பூர்வமான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே, அதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.மக்களின் இந்த விஞ்ஞான பூர்வமான நிலைப்பாட்டைத்தான் அச்சம்’ என தமிழக அரசு சித்தரிக்கிறது.உண்மையில் மக்களிடையே அச்ச உணர்வுதான் உள்ளது என்று தமிழக அரசு கருதியிருந்தால், தான் நியமித்த நிபுணர் குழு மூலம் அவற்றை போக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.அதற்கு மாறாக மத்திய அரசின் அதே அணுகுமுறையைத்தான் தான் நியமித்த நிபுணர் குழு மூலம் வெளிப்படுத்தியிருக்கிறது.
தமது போராட்டத்திற்கு எதிரான நயவஞ்சக அணுகுமுறையை தமிழக அரசு கொண்டிருந்தாலும், தமது நடவடிக்கைத்தான் போராட்டத்திற்கு எதிராக தமிழக அரசு திரும்புவதற்கு காரணம் என்றாகிவிடக்கூடாது என்பதால் தமிழ அரசு அணுகும் அதே முறையில், அதை கூடங்குளம் மக்களும் எதிர்கொள்கிறார்கள்.

எனவே இந்தப்போராட்டத்தை எந்த நிலையிலும் தமிழக அரசை நம்பி கூடங்குளம் மக்கள் ஆரம்பிக்கவும் இல்லை, தொடரவுமில்லை,தமது சொந்த பலத்திலேயேதான் ஊன்றி நிற்கிறார்கள்.விஞ்ஞானபூர்வமான ஆதாரத்துடன் தமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக போராடுகின்றனர்.

மத்திய அரசு ,மாநில அரசு ஆகியவற்றின் நிபுணர் குழுக்களும், அப்துல்கலாம் போன்ற அரைகிறுக்குகளும் கூடங்குளத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பேசுகிறார்கள்.ஆனால் மக்களோ கட்டிட உறுதிதன்மை குறித்த பிரச்சனைகளுக்காக போராடவில்லை.அணு உலையில் இருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சு கழிவுகளால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்தே போராடுகிறார்கள்.
கூடங்குளம் அணு உலையை ஆதரிப்பவன் ஒவ்வொருவனும், இதற்கு பதில் சொல்வதை தவிர்த்து கட்டிட உறுதித்தன்மை குறித்து பேசி திசைதிருப்புவதன் மூலம் தாங்கள் அயோக்கியர்கள், நேர்மையற்றவர்கள்,தேசத் துரோகிகள் என்பதை நிரூபிக்கின்றனர்.
ஆனால், இவர்களோ தற்போது தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை காரணம் காட்டி கூடங்குளம் மக்களின் போராட்டத்தை நாட்டுக்கு எதிரான போராட்டமாக சித்தரிக்கின்றனர்.இப்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து, அதை தீர்ப்பதற்காகத்தான் கூடங்குளம் அணு உலையை மத்திய அரசு உருவாக்கியது போன்று இந்த கழிசடைகள் ஊளை இடுகிறார்கள்.தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறை தமிழகத்தை இதுவரை ஆண்ட ஆட்சியாளர்களின், தமிழக நலன் மீதான அக்கறையின்மையின் வெளிப்பாடேயாகும்.தமிழகத்தில் இதுவரை வரலாறுகாணாத மின் பற்றாக்குறை நிலவினாலும் தமிழக அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகவும்,சலுகை விலையிலும் மின்சாரம் வழங்குவதை ஒரு சிறிதும் குறைத்துக்கொள்ளவில்லை.
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரத்தேவையும்,பற்றாக்குறையும் தமிழக மக்களின் மின்தேவை அதிகரிப்பால் உருவானது அல்ல.மாறாக பன்னாட்டு நிறுவனங்களின் மின் தேவை அதிகரிப்புதான் மின் பற்றாக்குறைக்கு அடிப்படையாகும்.யாரால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோ அவர்களுக்கு தமிழக அரசு மின்சாரம் வழங்குவதை குறைக்காமல் அதற்கு மாறாக மின்பற்றாக்குறைக்கான தண்டனையை தமிழக மக்களுக்கு வழங்குகிறது.இந்த தண்டனையின் உச்சக்கட்ட நடவடிக்கைதான் கூடங்குளம் அணு உலையாகும்.
கூடங்குளம் அணு உலை தமிழக மக்களுக்கு அளிக்கப்படும் தண்டனைதான் என்றாலும் இதுவும் கூட மின்பற்றாக்குறையை தீர்த்துவிடப் போவதில்லை.இப்போது கூடங்குளம் அணு உலை செயல்படத்தொடங்கினாலும் அதில் இருந்து மின்சாரம் வெளிவர 2 ஆண்டுகளாகும்.அடுத்து இந்தியா முழுக்க உள்ள 20 அணு மின்நிலையங்கள் மூலம் மொத்தமாக 4130 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.இதில் 4000 மெகாவாட் மின்சாரத்தை இந்த 20 அணு மின்நிலையங்களே பயன்படுத்திக்கொள்கின்றன.எஞ்சிய 130 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய மின் தொகுப்பிற்கு கிடைக்கிறது.
கூடங்குளம் அணு உலையில் இருந்து 2000 மெகாவாட் மின்சாரத்தை  உற்பத்தி செய்யப்போவதாக கூறுகிறார்கள்.இதில் பாதி மின்சாரத்தை தமிழகத்திற்கு தரப்போவதாக தூண்டில் போடுகிறார்கள்.20 அணு மின்நிலையங்களில் இருந்து கிடைக்காத மின்சாரம் கூடங்குளத்தில் இருந்து மட்டும் கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? ஒருவேளை கூடங்குளம் அணு மின்திட்டம் மிகவும் நவீனமானது என்றால் காலாவதியான தொழில்நுட்பத்தை உடைய ஏனைய 20 அணு உலைகளையும் மத்திய அரசு மூடிவிடுமா? உண்மையில் தமிழகத்தின் நலனுக்காகத்தான், கூடங்குளத்தில் இருந்து உற்பத்தியாகப் போவதாக சொல்லப்படும் மின்சாரத்தில் பாதியை தரப்போவதாக மத்திய அரசு கூறுமானால், அதை இப்பொழுதே நெய்வேலி அனல்மின்நிலையத்தில் இருந்தும் மத்திய மின் தொகுப்பில் இருந்தும் வழங்களாமே? ஏன் வழங்கவில்லை?

மேற்கண்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துபார்க்கும் போது, இந்தியாவில் உள்ள அணு உலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது இந்திய அரசின் நோக்கமல்ல என்பது தெளிவாகிறது.அதோடு கூடங்குளம் அணு உலையின்  மூலம் உற்பத்தியாகப் போவதாக கூறப்படும் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவோம் என்று மத்திய அரசு கூறுவதும் ஏமாற்றும் தந்திரமே என்பதும் விளங்குகிறது,

எனவே கூடங்குளம் அணு உலை விவகாரத்தில் மத்திய,மாநில அரசுகளின் செயல்பாடுகள் அனைத்துமே மக்களை ஏமாற்றும் செயல்பாடுகள் மட்டுமல்ல, அவைகள் தேசத்துரோக செயல்பாடுகளுமாகும்.
அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துகள் எந்தளவிற்கு உண்மையோ,தவிர்க்கவியலாததோ அந்தளவிற்கு அதற்கெதிரான போராட்டமும் தவிர்க்கவியலாமல் நடந்தே தீரும்! இதை ஒருபோதும் யாராலும் தடுத்துவிட முடியாது.கூடங்குளம் அணு உலை செயல்பாடே மக்கள் போராட்டத்தின் முடிவல்ல.அது போராட்டத்தில் வடிவ மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தும்!  

தொடர்புடைய கட்டுரைகள்:


1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!





4.கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

கூடல் பாலா said...

\\\இந்தப்போராட்டத்தை எந்த நிலையிலும் தமிழக அரசை நம்பி கூடங்குளம் மக்கள் ஆரம்பிக்கவும் இல்லை, தொடரவுமில்லை,தமது சொந்த பலத்திலேயேதான் ஊன்றி நிற்கிறார்கள்\\\ இதுதான் உண்மை...மக்களின் நோக்கம் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் ....இதை மீறி அரசு மக்களை ஒடுக்க நினைத்தால் ஒடுங்கப்போவது மக்களல்ல ...அரசுதான்...