சங்ககாலத்தில்
தென்னிந்திய பகுதிகளில் ஊடுருவிய பார்ப்பனர்கள், தமது பார்ப்பனிய கோட்பாடுகளை ஆட்சியாளர்களிடையே
செல்வாக்கு பெறச்செய்தனர்.தென்னிந்தியாவில் பார்ப்பன ஊடுருவலுக்கு முன்பாகவே, வட இந்தியாவில்
பார்ப்பனியத்தை எதிர்த்து, வட இந்திய மக்களிடையே வெற்றிக்கொடி நாட்டிய சமணமும்,பெளத்தமும்
தென்னியந்தியாவிற்கு வந்தது.
5.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
ஆனால், இவைகள்
தமிழ் மக்களிடையே பெருத்த வரவேற்பு எதையும் பெறவில்லை.இவைகள் பார்ப்பனியம் போதித்த
பிறப்பின் அடிப்படையிலேயே, ஒவ்வொரு மனிதனின் சமூகத்தகுதி தீர்மானிக்கப்படுகிறது.அதாவது
பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு,தாழ்வு கற்பித்தமைக்கு எதிராக, மனிதர்கள்
அனைவரும் சமமானவர்கள் என்பதையே உள்ளடக்கமாக கற்பித்தது.அதோடு கடவுள் நம்பிக்கையையும்
மறுதலிப்பதாகவும் அமைந்திருந்தது.
ஆனாலும் இவைகள்
தமிழ்மக்களிடையே வரவேற்பை பெறாததற்கு சமணமும்,பௌத்தமும் போன்றே தமிழ்ச் சமூகத்தின்
வாழ்வியலும் அமைந்திருந்தது என்பதுதான். பிறப்பின் அடிப்படையில் மனிதர்களை உயர்வு,
தாழ்வாக பார்க்கும் பண்பாடு தமிழர்களிடையே அன்று இல்லை.அதே நேரத்தில் தொழில் அடிப்படையில்
வேலைப் பிரிவினைகள் அமைந்திருந்தது.இந்த வேலைப் பிரிவினைகளுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள்
கற்பிக்கப்படவில்லை.ஒரே குடும்பத்தில் பல தொழிற் பிரிவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
எனவே, தமிழ்ச்சமூக
வாழ்வியலும் சமணம்,பௌத்தம் போதித்த வாழ்வியலும் ஏறத்தாழ உள்ளடக்கத்தில் ஒன்றாய் இருந்த
அதே வேளையில், இவைகளுக்கிடையில் தனிச்சிறப்பான வேறுபாடுகளும் இருக்கவே செய்தன.
இந்த தனிச்சிறப்பான
வேறுபாடுகள் அந்தந்த நிலப்பகுதியின் வளத்தை பொருத்து அமைந்திருந்தது.குறிப்பாக தமிழ்
மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பின் வளத்திற்கு ஏற்ப இவைகள் அமைந்திருந்தது.தமிழகத்தில் நிலப்பகுதிகள்
ஐவகையாக பிரிக்கப்பட்டிருந்தது.அதற்கேற்ப அந்தந்த நிலப்பகுதியின் சிறப்புத்தன்மைகளுக்கு
ஏற்ப அவைகள் அமைந்திருந்தது.
குறிப்பிட்ட ஒவ்வொரு
நிலப்பகுதியின் இயற்கை, அதைச் சார்ந்த பொருள் உற்பத்தி, அதை ஒட்டிய வாழ்வியல் முறையும்,
அதற்கே உரித்தான முறையில் இயற்கையை வணங்குதல்,மூதாதையரை வணங்குதல் ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாக
இப்பண்பாடுகள் அமைந்திருந்தது.
ஐவகை நிலப்பகுதிகளுக்கு
ஏற்ப இப்பண்பாடுகள் தனித்த கூறுகளை கொண்டிருந்தாலும்,இவற்றிற்கு இடையிலே பொதுவான கூறுகளும்
உள்ளடங்கி இருந்தது.இந்த ஐவகை நிலப்பகுதிகளிலும் இயற்கையை அதாவது மனிதர்களின் ஐம்புலன்களுக்கு,
அறிதலுக்கு உட்பட்டவற்றையே ஏற்பது,வணங்குதல் ஆகியவையே அவைகளாகும்.
சங்ககால தமிழச்சமூகம்
புராதன பொது உடைமைச்சமூக அமைப்பில் இருந்து நிலப்பிரபுத்துவ சமூக வளர்ச்சியை நோக்கிய
பயணத்தில் இருந்தது.நிலப்பிரப்புத்துவ சமூகமாக இன்னுமும் உருவெடுக்காத காரணத்தால்,
ஐவகை நிலப்பகுதிகளையும் ஒருங்கிணைத்து பொதுமைப்படுத்தும் வாழ்வியல் முறை உருவாகவில்லை.இதன்
காரணமாக இயற்கைக்கு மாறான கற்பனையான கடவுளர்களை கற்பித்து பொதுவான வாழ்வியல் முறையை
உள்ளடக்கிய சமயங்கள் தோன்றுவதற்கான தேவை எழவில்லை.
ஆரிய வருகையின்
போது வட இந்தியா புராதன பொதுவுடைச் சமூகத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்தது.
ஆனால் பார்ப்பன
ஊடுருவலின் போது தென்னிந்தியா நிலப்பிரபுத்துவ சமூகத்தை நோக்கிய பயணத்தில் இருந்தது.
ஆரிய படையெடுப்பின்
போது, வட இந்திய சமூகம் குலக்குழு சமூகமாகவும் பார்ப்பன ஊடுருவலின் போது தென்னிந்திய
சமூகங்கள் முற்றாக குலக்குழுச் சமூகமாக இல்லாமல்,நிலப்பிரபுத்துவ சமூகமாகவும் அல்லாது
இரு தன்மைகளையும் உள்ளடக்கிய, நிலப்பிரபுத்துவத்தை நோக்கிய வளர்ச்சிப்பாதையில் இருந்தது.
இவைகளின் காரணமாகவே
சமயங்கள் தோன்றுவதற்குரிய தேவை இங்கே எழவில்லை.அதே வேளையில் தமிழ்ச் சமூகம் நிலப்பிரபுத்துவ
சமூகமாக உருவெடுக்காவிட்டாலும், அதன் சமூக பொருளாதார வளர்ச்சியும்,மொழி வளர்ச்சியும்
தனிச்சிறப்பான வளர்ச்சியை கொண்டிருந்தது.இந்த தனிச்சிறப்பின் காரணமாகத்தான் தமிழ் மொழியினுள்ளும்,பண்பாட்டினுள்ளும்
பார்ப்பன,சமஸ்கிருதமோ,சமண,பௌத்த மொழிகளான பிராகிருதம்,பாலி இவைச் சார்ந்த பண்பாடுகளும்
நுழைந்து வளப்படுத்த வேண்டிய தேவையேதும் எழவில்லை.
ஆனால் தமிழ் தவிர்த்த
இதர திராவிட இனக்குடும்பத்தின் பிறவற்றில், பார்ப்பன பண்பாடும் ,சமஸ்கிருதமும் அவைகளின்
தேவை காரணமாக உள்ளே எளிதில் நுழைந்து, அதிக்கம் பெற முடிந்தது.இந்த ஊடுருவலுக்கு பின்னர்
தான் திராவிட மொழிக்குடும்பத்தின் வட்டார வழக்குகளில் பார்ப்பன,சமஸ்கிருதம் ஊடுருவி
இன்று நாம் காணும் கன்னடம்,தெலுங்கு,மலையாளம் ஆகியவை உருவெடுத்தன.பார்ப்பன பண்பாடும்
சமஸ்கிருதமும் இவைகளின் தேவையின் காரணாமாக அவற்றில் பிரிக்க முடியாத அங்கமாகியது.மேற்கண்ட
மொழிகளிலும், இம்மக்களிடமும் நிலவிய மொழி மற்றும் பண்பாட்டு வடிவங்களில் பார்ப்பனிய
உள்ளடக்கத்தை நுழைத்த போது அவைகள் அம்மக்களால் நிராகரிக்கப்படாமல் ஆதிக்கம் பெற்றது.ஆனால்
தமிழ் சமூகத்தின் தனிச்சிறப்பான பண்பாடு,மொழி வளர்ச்சி காரணமாக பார்ப்பனியமும்,சமஸ்கிருதமும்
முற்றாக தமிழச் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டது.
அதே நேரத்தில்
பார்ப்பன பண்பாடு, தமிழ் சமூகத்தை ஆண்ட ஆட்சியாளர்களுக்கு தேவைப்பட்டது.தமிழ்ச் சமூகம்
நிலப்பிரப்புத்துவ சமூகத்தை எட்டிப்பிடிக்கும் தருணம் நெருங்கிய போதுதான் மக்களை அடக்கியாள
படை பலத்தோடு, பண்பாட்டு தேவையும் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது.இந்த தேவையை மிகச்சிறப்பாக
ஈடுசெய்யும் கருவியாக பார்ப்பனியம் விளங்கியது.
ஆட்சியாளர்கள்
தமது தேவை காரணமாக பார்ப்பனியத்தை ஏற்றுக்கொண்டாலும் மக்களுக்கு அந்தத்தேவை எழவில்லை.இதன்
காரணமாக மக்கள் தமது வாழ்வியலுக்கு புறம்பான பார்ப்பனியத்தை நிராகரித்தனர்.இந்த ஒதுக்குதல்
எந்த அளவிற்கு இருந்ததோ அந்த அளவிற்கு அதை ஒடுக்குவதற்கான தேவையும் ஆட்சியாளர்களுக்கு
எழுந்தது.முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையை மக்கள் எதிர்கொண்டனர்.
ஆட்சியாளர்களை
எதிர்த்த போராட்டட்த்தின் ஒரு அங்கமாகத்தான் இப்போது சமணமும்,பௌத்தமும் மக்களிடையே
செல்வாக்கு பெறத்தொடங்கியது.
ஆட்சியாளர்களின்
பண்பாடாக உருவெடுத்த பார்ப்பனியத்தை எதிர்க்கொள்வதற்கான பண்பாட்டு ஆயுதமாக மக்களுக்கு
சமணமும்,பௌத்தமும் விளங்கியது.பண்பாட்டு தளத்தில் தனது பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதற்கு
ஏற்ற ஆயுதத்தை பெற்று வெற்றி பெற்ற மக்கள், அரசியல் தளத்திலும் வெற்றிக்கான தேவையும்,அவசியமும்
ஏற்பட்ட போது பார்ப்பனமயமாக்கப்பட்ட ஆட்சியாளர்களை ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கி
எறிந்தனர்.தமக்கான ஆட்சியை நிறுவிக்கொண்டனர்.
இப்படி உருவாக்கப்பட்ட
களப்பிரர் ஆட்சி ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தில் கோலோச்சியது.இந்த களப்பிரர்
ஆட்சியைத்தான் இன்றைய வரலாற்று ஆய்வாளர்கள் எனப்படுவோர் இருண்ட காலம் என்கிறார்கள்.மூன்று
நூற்றாண்டு கால களப்பிரர் ஆட்சியின் சுவடுகளே இல்லாமல் போயுள்ளது.பிற்காலத்தில் கிடைத்துள்ள
ஒன்றிரண்டு ஆவணங்களும் கூட களப்பிரர் பற்றிய முழுமையான வரலாற்றை நமக்கு தரவில்லை.
போதிய ஆதாரங்கள்
இன்றியே இக்காலத்தை நமது வரலாற்று ஆய்வாளர்கள் இருண்ட காலம் என்று எப்படி வரையறுத்தார்கள்? கிடைத்துள்ளச் சான்றுகளின் அடிப்படையில் இவர்களின்
முடிவுகள் பொருந்தி போகிறதா? இல்லையா? களப்பிரர் ஆட்சி எப்படிப்பட்டது போன்ற வினாக்களுக்கான
விடையை அடுத்தத் தொடரில் பார்ப்போம்.
தொடர்புடைய கட்டுரைகள்:
1.தோல்வியே தமிழனின் வரலாறு! பாகம்-1
3.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I
4.மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II
5.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III
(களப்பிரர்கள் காலம் கிபி 3-6)

0 comments:
Post a Comment