விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Wednesday, 18 April 2012

தோல்வியே தமிழனின் வரலாறு பாகம்-4 (சங்ககாலம்- களப்பிரர்கள் காலம்)

தமிழக வரலாற்றில் கிபி 3 முதல் 6 வரையிலான மூன்று நூற்றாண்டுகளைகளப்பிரர் ஆட்சிக்காலத்தைவரலாற்று ஆய்வாளர்கள் இருண்ட காலம் என்று வரையறுத்திருக்கிறார்கள்.இவர்களோடு தமிழினவாதிகளும் உடன்படுகிறார்கள்.தமிழினவாதிகள் இராசராசன் போன்றோரின் ஆட்சிக்காலத்தைத்தான் தமிழனின் பெருமையை பறைச்சாற்றும் சிறந்த ஆட்சிக்காலமாக போற்றுகின்றனர்.
தளவாய்புரம்,வேள்விக்குடி ஆகிய செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் களப்பிரர் ஆட்சிக்காலம் இருண்டக்காலம் இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களாக திகழ்கின்றன.ஆனாலும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது முந்தைய நிலையை மாற்றிக்கொள்ள தயாரில்லை.


சங்ககாலத்தில் கடல் கடந்த வாணிபத்திற்கு ஆட்சியாளர்கள் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளனர்.விவசாயம் அச்சமூகத்தில் திட்டுத்திட்டான ஒரு தொழிலாகவும், ஆட்சியாளர்களின் ஊக்குவிப்பு இல்லாமலும் இருந்துள்ளது.சங்க காலம் குலக்குழு சமூகங்களின் தொகுப்பாக இருந்ததால்,அந்தந்த வட்டார குலக்குழுக்களின் தன்மைகளுக்கு ஏற்பவே விவசாயம் என்பது மொத்த சமூகத்தில் மையப்படுத்தப்பட்ட தொழிலாக உருவெடுக்கவில்லை
ஆனால் சங்ககாலத்தில் பிற்பகுதியில் ஆட்சியாளர்கள் பார்ப்பனியத்தோடு ஆசிய சொத்துடைமை வடிவத்தையும் ஏற்றுக்கொண்டனர்.இதற்கு ஆதாரமாக கரிகால் சோழன் கட்டிய கல்லனைத் திகழ்கிறது.

இதன் தொடர்ச்சியாக களப்பிரர் ஆட்சிக்காலத்தில் விவசாயத்திற்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.இதனால் விவசாயம் செழித்தோங்கியது.இத்தகவலின் மூலம் களப்பிரர் ஆட்சிக்கு முந்தைய ஆட்சிக்காலங்களில் சமூகம் அடைந்த வளர்ச்சியை விட, இப்போது சமூக வளர்ச்சி மேலும் அதிகரித்தது என்பதற்கு இது ஆதாரமாக  உள்ளது.
சங்ககால சமூகம் குலக்குழுக்கள் மேலாண்மை செலுத்திய காலகட்டமாக விளங்கியது என்பதில் இருந்தும்,விவசாயம் இச்சமூகத்தில் மையப்படுத்தப்பட்ட தொழிலாக மாறவில்லை என்பதில் இருந்தும் இக்காலகட்டம் புராதான பொதுவுடைமைச்சமூகம் மற்றும் நிலபுரப்புத்துவ சமூகம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கிய இடைக்கட்ட சமூகமாகவும் நிலபிரபுத்துவ சமூகத்தை நோக்கிய வளர்ச்சிப்பாதையிலும் இருந்துள்ளது.
சமூகத்தின் இந்த அடித்தளத்திற்கு ஏற்பவே அரசியல் தளமும் விளங்கியது.மூவேந்தர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் என்று பொதுவில் வரையறுக்கப்பட்டாலும், இவர்கள் அல்லாத ஏனைய அதிகார மையங்களும் ,ஆட்சிகளும் நிலவியது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகவும் உள்ளது.இதன் மூலம் அக்கால ஆட்சியாளர்கள் குலக்குழுச் சமூகங்களை ஆண்ட ஆட்சியாளர்களாகவே இருந்துள்ளனர்.
புராதன பொதுவுடைமைச்சமூகத்திற்கும், நிலப்புரபுத்துவ சமூகத்திற்கும் இடைக்கட்ட சமூகமாக ஆண்டான் அடிமைச்சமூகம் நிலவியதை மார்க்சியம் வரையறுத்திருந்தாலும், மார்க்சியம் வரையறுத்த அதே வடிவில் தமிழகத்தில் ஆண்டான் அடிமைச்சமூகம் நிலவியதற்கான சான்றுகள் ஏதுமில்லை.அதே வேளையில் குலக்குழு ஆட்சியாளர்களுக்கு இடையிலான போர்கள் மூலம் தோல்வியடைந்தவர்கள் ,வெற்றிப்பெற்றவர்களால் அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்ற செய்தி வரலாற்றில் நமக்கு கிடைத்தாலும் இவைகள் ஆண்டான் அடிமைச் சமூகம் என்ற வரையறுப்புக்கு உட்பட்டவைகளாக இல்லை.அதாவது சமூக உற்பத்தி என்பது அடிமைகளின் உழைப்பில் இருந்து தீர்மானிக்கும் அளவிற்கு வலிமையானதாக இல்லை.மேலும் ஆண்டான் அடிமைச் சமூகம் தனித்துவமான உற்பத்தியைக்கொண்ட சமூக அமைப்பல்ல.இதுவும் விவசாய உற்பத்தியையே  அடிப்படையாக கொண்டது.நிலபிரபுத்துவ சமூக வளர்ச்சியின் இடைக்கட்டம் என்ற அடிப்படையில் ஆண்டான் அடிமைச் சமூகம் என்பது தவிர்க்கவியலாத ஒரு வடிவம் அல்ல என்பதையும் இது அந்தந்த நாடுகளின், சமூகங்களின் தன்மைகளுக்கு ஏற்ப மாறுபடக்கூடியதாகவும் இருக்கும் என்பதையே சங்க காலம் நமக்கு  உணர்த்துகிறது.
மூவேந்தர்களுக்கு இடையிலும் பல்வேறு குலக்குழு ஆட்சியாளர்களுக்கு இடையிலும் ஏராளமான போர்களும் நடந்துள்ளது.இப்போர்களின் மூலம் மையப்படுத்தப்பட்ட நிர்வாக முறையை நோக்கிய அதாவது நிலபிரபுத்துவ சமூகத்தை நோக்கிய பயணத்தில் அச்சமூகம் இருந்ததையே இது நமக்கு தெளிவுப்படுத்துகிறது.
இக்காலக்கட்டத்தில்தான் சமணம்,பௌத்தம்,பார்ப்பனியம் ஆகிய சமயங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன.இவற்றில் பார்ப்பனியமே ஆட்சியாளர்கள் ஆதரவைப் பெறுகிறது.தென்னகத்தில் பார்ப்பனிய ஊடுருவலுக்கு முன்பே, வட இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்து குலக்குழு சமூகங்களின் வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் வாழ்வியலை உள்ளடக்கிய சமணமும்,பௌத்தமும் தமிழகத்திற்கு வந்த போதும் அவைகள் ஆட்சியாளர்களை வசீகரிக்கவில்லை.இதுவும் கூட அன்றைய சமூக வளர்ச்சியின் தன்மையை மறைமுகமாக வெளிப்படுத்துவதாக உள்ளது.
சமயங்களின் தோற்றம் என்பது நிலப்பிரபுத்துவ சமூக வளர்ச்சியின் தேவைக்கு ஏற்பவே உருவாகக் கூடியது.புராதன பொதுவுடமைச் சமூகத்திற்கு அடுத்த சமூகமான நிலப்பிரபுத்துவ உடைமைச் சமூகத்தை அதன் சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்தக்கூடிய கூறுகளை உள்ளடக்கிய பண்பாடுகளின் தொகுப்புதான் சமயங்கள்.
நிலபிரபுத்துவ சமூகத்தை நெருங்கிக்கொண்டிருந்த தமிழ்ச் சமூகம்-அதன் ஆட்சியாளர்களுக்கு அதற்கேற்றதொரு பண்பாட்டு வடிவமாக சமண,பௌத்த சமயங்கள் இல்லாததால்தான், அவைகள் ஆட்சியாளர்களிடையே செல்வாக்கு எதையும் பெறமுடியவில்லை.
அதே நேரத்தில் சமண,பௌத்த சமயங்கள் வட இந்தியாவில் பார்ப்பனியத்தை எதிர்த்த குலக்குழு சமூக வாழ்வை உள்ளடக்கிய கூறுகளைக் கொண்டதாக உருவாகி இருந்ததாலும்,அவைகள் பார்ப்பனர்களால்-பார்ப்பனியத்தால்உருவாக்கப்பட்ட சொத்து வடிவத்திற்கு ஏற்புடையதாக அமையவில்லை.
சமண,பௌத்த சமயங்களின் இந்த போதாமைகாரணமாக இச்சமயங்கள் வட இந்தியாவிலும் ஆரம்பத்தில் ஆட்சியாளர்களிடையே செல்வாக்குப் பெறவில்லை.புராதன பொதுவுடைமை குலக்குழு வாழ்வின் கூறுகளை சமண,பௌத்த சமயங்கள் போதித்ததாலும் அவைகளை நிலை நிறுத்தக்கூடிய சமூக சொத்துடைமையின் , தேவையை  அவைகள் உணரவில்லை.இதன் காரணமாக பார்ப்பனியத்தை வீழ்த்தும் அதன் வலிமையும் ,ஆற்றலும் சமூக அடித்தளத்திற்கு ஏற்பவே அமைந்திருந்தது.
சமூக அடித்தளத்தை பற்றிய கண்ணோட்டத்தில் இச்சமயங்களின் நிலைப்பாடுகள் கற்பனையானதும், அகநிலை விருப்பமுமாகவே அமைந்திருந்தது.இதன் காரணமாக பார்ப்பனியம் உருவாக்கி வைத்திருந்த சொத்துடைமை வடிவத்தை இச்சமயங்களும் நடைமுறையில் அங்கீகரித்தன.இதற்கு ஏற்ப பார்ப்பனியத்தின் பல்வேறுக் கூறுகள் இச்சமயங்களிலும் ஊடுருவியது.
இதன் பின்னரே இச்சமயங்கள் ஆட்சியாளர்களிடம் செல்வாக்குப் பெறத்தொடங்கியது.காலப்போக்கில் படிப்படியாக இவைகள் பார்ப்பன மதத்தின் ஒரு அங்கமாக ஆக்கப்பட்டன.இதனால் இச்சமயங்களைக் காட்டினும் பார்ப்பனியமே மக்களை ஒடுக்குவதற்கான சிறந்த ஆயுதமாக ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பார்ப்பனியம் எந்த ஒரு சமூக அமைப்பிலும் ஆளும் வர்க்கங்களின் சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்குமான மிக விரிவான ஆழமான அடிப்படைகளைக் கொண்டதாகும்.
சமண,பௌத்த சமயங்கள் அக்காலக்கட்டத்தில் நிலவிய சொத்துடைமை வடிவத்திற்கு ஏற்ப சிலக்கூறுகளை பார்ப்பனியத்திடம் இருந்து பெற்றுக்கொண்ட போது, ஆட்சியாளர்கள் அதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்டாலும், இது எல்லாக் காலக்கட்டத்திற்கும் ஆட்சியாளர்கள் தமது சுரண்டலை நியாயப்படுத்தி தமது ஆட்சி,அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ளும் தேவையை நிறைவு செய்யக்கூடியதாக அமையவில்லை.இதை நிறைவு செய்யும் கூறுகளையும்,அம்சங்களையும் பார்ப்பனியமே உள்ளடக்கி இருந்ததால்தான் அது ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது வட இந்திய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல தமிழக ஆட்சியாளர்களுக்கும் ஏற்புடையதாகவே இருந்தது.இதன் அடிப்படையிலேயே ஆட்சியாளர்களிடம் பார்ப்பனியம் செல்வாக்குப் பெற்றது.
வட இந்தியாவில் பார்ப்பன ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட சொத்துடைமை வடிவமே அது,தான் சென்ற இடங்களில் எல்லாம் நிலைபெற்றது.
பார்ப்பனியம் பூர்வகுடி மக்களிடம் நிலவிய பல்வேறு கூறுகளையும் ஆரிய-பார்ப்பன மேலாண்மை கூறுகளையும் கலந்து உருவாக்கப்பட்ட பண்பாடேயாகும்.
இந்த அடிப்படையில்தான் பூர்வகுடிமக்களிடையே நிலவிய நிலவுடைமை வடிவமான பொதுவுடைமை வடிவத்தை எடுத்துக்கொண்டு அதில் தனது மேலாண்மையை பார்ப்பனியத்தை நிலைநிறுத்திக்கொள்ளும் புதிய சொத்து வடிவத்தை நிறுவியது.அதன் படி நிலங்கள் அனைத்தும் சமூக உடைமையாக-மன்னனுக்கே சொந்தமானதாக ஆக்கப்பட்டது.விவசாயத்தை சார்ந்தே ஏனைய கைத்தொழில்கள் அனைத்தும் வைக்கப்பட்டன.
இதன் மூலம் நிலத்தில் தனி உடைமை மறுக்கப்பட்டு சமூகத்தின் வளர்ச்சி தடுக்கப்பட்டதுடன் , விவசாயத்தை சார்ந்தே அனைத்து தொழில்களும் வைக்கப்பட்டு இவைகளுக்கிடையிலான முரண்பாடுகளும் இல்லாமல் ஆக்கப்பட்டதன் மூலம் இவைகளின் வளர்ச்சியும் தடுக்கப்பட்டது.
இதைத்தான் ஆசான் காரல் மார்க்ஸ் ஆசிய சொத்துடைமை வடிவம் என்றும் இதன் காரணமாகவே இந்திய சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளாக மோன நிலையில் இருந்தது என்றும் வரையறுத்துள்ளார்.
இந்த ஆசிய சொத்துடைமை வடிவம் இந்தியாவில் மட்டுமல்ல, பௌத்த மதத்தின் மூலம் அது சென்ற நாடுகளுக்கும் பரவியது.ஆனால் இந்தியா மற்றும் இலங்கையைப் போன்று ஏனைய நாடுகளில் இந்த ஆசிய சொத்துடைமை வடிவம் நீடித்திருக்கவில்லை.
ஆசிய சொத்துடைமை வடிவம் பரவிய நாடுகளில் இந்தியாவைப்போன்று மக்கள் பார்ப்பனியத்தால் நால்வருணமாகவும், இதற்கு வெளியில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் கூறுபோடப்படாத காரணத்தால் சமூக வளர்ச்சியின் தேவைக்கு ஏற்ப ஆசிய சொத்துடைமை வடிவத்தை பிற்காலத்தில் அச்சமூகங்கள் நிராகரித்து விட்டுள்ளன.இதற்கு ஏற்ப பௌத்தமும் புதிய சமூக கூறுகளை உள்வாங்கிக்கொண்டு இன்றுவரை அந்நாடுகளில்  செல்வாக்குடன் திகழ்கின்றன.
ஆனால் இந்தியாவிலோ பார்ப்பனியத்தால் சமூகம் எப்பொழுதுமே ஒன்று சேர இயலாத படி கூறுப்போட பட்டுவிட்டதால், சமூக மாற்றம் என்பதும் எட்டாக்கனியாகவே ஆக்கப்பட்டுள்ளது.
இந்தியச் சமூகம் நால்வருணமாகவும், இதற்கு வெளியில் தாழ்த்தப்பட்டவர்களையும், இவைகள் கீழிருந்து மேலாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டும், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதாகவும் கட்டமைக்கப்பட்டது.
இவைகளை ஏற்பது அவைகளின் கடமையாகவும் ,இதை மறுத்தால் என்ன தண்டனை என்பதும் வரையறுக்கப்பட்டு அவைகள் ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக கட்டமைக்கப்பட்டன.அவர் அவர்க்கு வாழ தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு வெளியில் தப்பித்து சென்று வாழ முடியாததாகவும் இவைகள் அமைந்திருந்ததால் தான் இரண்டாயிரம் ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சியும் இன்றி இந்தியா மோன நிலையில்உறக்கத்தில்-கிடந்தது.
சமூகத்தின் மேலடுக்குகளில் அதாவது அரசியலில் எப்படிபட்ட மாற்றங்கள் நிகழ்ந்தாலும் அவைகள் இந்திய சமூக வாழ்வில் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை.
ஆட்சியாளர்கள் யாராயினும் அவர்கள் யாரும் சமூகத்தின் அடித்தளமான ஆசிய சொத்துடைமை வடிவத்தில் மாற்றமெதையும் கொண்டுவரவில்லை.அந்த அளவுக்கு இந்த ஆசிய சொத்துடைமை வடிவம் ஆட்சியாளர்களுக்கு மிகச்சிறந்த வடிவமாக திகழ்ந்துள்ளது.
களப்பிரர் ஆட்சி பார்ப்பனியத்தை எதிர்த்து மக்களால் உருவாக்கப்பட்டாலும்,பார்ப்பனியத்தை எதிர்த்த வாழ்வியல் முறையைக்கொண்ட சமயங்களான சமணமும்,பௌத்தமும் மக்களின் சமயங்களாகவும்,ஆட்சியாளர்களின் சமயங்களாகவும் அமைந்திருந்தாலும் சொத்துடைமை வடிவத்தில் பார்ப்பனியத்தின் உருவாக்கமான ஆசிய சொத்துடைமை வடிவத்தையே தமிழகத்தில் ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
களப்பிரர்கள் பார்ப்பனியத்தை எதிர்த்து மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியாளர்கள் என்றாலும் அவர்களும் நாளடைவில் ஆட்சியாளர்களுக்கு உரிய பண்பை அடைவது தவிர்க்கவியலாத விதியாகும்.அதனடிப்படையில் தமது நலன்களுக்கு மிகச்சிறந்த ஆசிய சொத்துடைமை வடிவத்தையும்,இதை தக்கவைத்துக்கொள்ள தவிர்க்கவியலாமல் பார்ப்பனியத்தை ஏற்பது என்பதும் நடந்தது.
இதை உறுதிப்படுத்தும் வகையில்தான் பார்ப்பன மதம் ஆட்சியாளர்களின் எவ்வித இடையூறும் இன்றி சமண,பௌத்த சமயங்களுக்கு அக்கம்பக்கமாக வளர அனுமதிக்கப்பட்டது.களப்பிர மன்னர்கள் சிலர் பார்ப்பன மதத்தில் சேர்ந்தனர் என்பதும் அமைந்துள்ளது.பொதுவில் சமயங்கள் என்பவை நிலபிரபுத்துவ வர்க்க சுரண்டல் மற்றும் ஆதிக்கத்தின் தவிர்க்கவியலாத பண்பாட்டு அங்கமாகும்.நிலபிரபுத்துவ சுரண்டல் ஒடுக்குமுறை நிலவும் வரை இவைகளின் தேவையும் தவிர்க்கவியலாதது.
மேற்கண்ட அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சுரண்டலை,ஒடுக்குமுறையை தனிச்சிறப்பான வழியில் பாதுகாக்கும் கூறுகளை உடைய பார்ப்பனியம் வட இந்தியாவை போன்றே தென்னிந்தியாவிலும், அதிலும் குறிப்பாக தமிழகத்தில் வெற்றிப்பெற்றது அதிசய நிகழ்வல்ல.
பார்ப்பனிய உருவாக்கத்தின் மூலம் தமிழகத்தில் மட்டுமல்ல, மொத்த இந்தியாவிலும் நிலபிரபுத்துவ வளர்ச்சி என்பது - அதன் இயல்பான வளர்ச்சி - வலுக்கட்டாயமாக தடுக்கப்பட்டது என்பதை சமூக ஆர்வலர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
களப்பிரர் ஆட்சியின் இறுதியில் பார்ப்பனியம் தவிர்க்கவியலாமல் வெற்றிப் பெற்றது என்பதை பார்த்தோம்.அதே நேரத்தில் களப்பிரர் ஆட்சிக்காலம், சங்ககாலத்தைக் காட்டிலும், களப்பிரர் ஆட்சிக்கு பிந்தைய ஆட்சிகளை காட்டிலும் மிகச்சிறப்பான ஆட்சியாகவே விளங்கியது.
களப்பிரர் ஆட்சியில் விவசாயம்  செழிப்பாக வளர்க்கப்  பட்டுள்ளது, தமிழும் மிகச் சிறப்பான வளர்ச்சி அடைந்தது, தமிழ் இலக்கியங்களின் வளர்ச்சி புதிய சிகரத்தை தொட்டது என்பதற்கு சான்றுகளாக கீழ்கண்ட நூல்கள் திகழ்கின்றன,
·         சங்க காலத்தில் இயற்றப்பட்ட பல்வேறு தனிப்பாடல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களாக தொகுக்கப்பட்டன,
·         வேந்தர்களை புகழ்ந்து பாடும் பாடல்களுக்கு மாற்றாக சமயம். நீதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு. புதிய இலக்கணங்களின் அடிப்படையில் அபிநயம் , காக்கைப்பாடினியம்   ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன,
·         பதினென்கீழ்கணக்கு நூல்களும், வளையாபதி  ,குண்டலகேசி ,சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம்,  மணிமேகலை  ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும் நாலடியார் போன்ற நூல்களும் இயற்றப்பட்டன,
·         அற்புத திருவந்தாதி , திருவிரட்டை மணிமாலை , திருவாளங்காட்டு மூத்த திருப்பதிகம் ,  திருமந்திரம்,  பெருங்கதை ,  இறையனார் அகப்பொருளுறை ,  பரிபாடல் ,  கலித்தொகை , திருமுருகாற்றுப்படை ,  கிளிவிருத்தம் , எலிவிருத்தம் , நரிவிருத்தம்  உட்பட  ஆயிரக்கணக்கான  நூல்களும்  இயற்றப்பட்டன,
இதன்  மூலம் களப்பிரர்  காலம்  தமிழர்களின்  வரலாற்றில்  ஒளி  மிகுந்த காலமாகவே  திழ்ந்தது  என்பதை நிரூப்பிக்கின்றன  
ஆனாலும்  களப்பிரர் ஆட்சிகாலத்தை வரலாற்று ஆய்வாளர்களும், ஆட்சியாளர்களும் இருண்டகாலம் என்றே இன்று வரை கூசாமல் புளுகி வருகின்றனர். அதோடு களப்பிரர் ஆட்சியின் சுவடுகளே இல்லாமல் அழித்த பார்ப்பனிய ஆட்சியாளர்களின் செயலை நியாயப்படுத்த களப்பிரர்கள் தமிழர்களே  இல்லை  என்றும்  கூறுகின்றனர்.
வரலாற்று  ஆய்வாளர்கள் எனப்படுவோர்  அனைவரும் பார்ப்பனியத்தை  நியாயப்படுத்தும் வகையிலேயே முற்றிலும்  உண்மைக்குப்  புறம்பான  முடிவுகளை  எவ்வித  நெருடலும், கூச்சமும்  இன்றி  வரலாற்றில் திணித்துள்ளனர்.
இந்த வரலாற்று  ஆய்வாளர்களில்  பெரும்பானமையினர்  களப்பிரர்கள்  கர்நாடகத்தில்  இருந்து தமிழகத்திற்கு  வந்தவர்கள் என்று  கூறுகின்றனர். கர்நாடக  மாநிலத்தில்  புழக்கத்தில்  சில  வார்த்தைகளை ஒப்பிட்டு  இதற்கு ஆதாரமாக  காட்டுகின்றனர். இவர்களால் காட்டப்படும் ஆதாரங்கள் எனப்படுபவை மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடுவதாகவே உள்ளன,
திராவிட மொழிக்குடும்பம்  என்ற வகையில் தமிழில் வழங்கப்படும் பல வார்த்தைகள் திராவிட மொழிக்குடும்பத்தின் ஏனைய மொழிகளிலும் இருக்கும் என்பது இயற்கை. ஆனால் இவர்களோ இதையே  தமது நோக்கத்திற்கு ஏற்ப திரித்துக்கூறுகின்றனர்.
களப்பிரர்களின்  தாயகம் கர்நாடகம் என்று கூறும் இவர்கள் அவர்கள் தமது தாய் மொழியை தமிழகத்தில் வளர்த்தற்கான ஆதாரங்களையோ அல்லது வளர்க்காதற்கான காரணங்களையோ தரவேண்டும் என்று கூட கருதவில்லை. ஆனால் அதற்கு நேர்மாறாக களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பிராகிருதம். பாலி ஆகிய வட மொழிகள் ஆதிக்கம் பெற்றதாக கூறுகின்றனர்.
பிராகிருதம்,பாலி ஆகிய வட மொழிகளை களப்பிரர் ஆட்சியாளர்கள் ஆதரிக்க வேண்டிய தேவை, அவசியம் என்ன என்பதை வசதியாக எழுப்பாமலேயே விட்டு விடுகின்றனர்.
சமணம்,பௌத்தம் ஆகிய சமயங்கள் வட இந்தியாவிலிருந்து அச்சமயங்களின் துறவிகள்  மூலமே தமிழகத்திற்கு வந்தது. மகாவீரர் மற்றும் புத்தரின் போதனைகள் இம்மொழிகளில் இருந்ததாலும் இதனால் துறவிகளின் தேவைகளுக்கு ஏற்பவே அவைகள் ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெற்றன என்பது அதிசயமான நிகழ்வல்ல, மாறாக அவைகள் அவசியமான தேவையாகும்.
எனவே, பிராகிருதம். பாலி ஆகிய மொழிகளுக்கு ஆட்சியாளர்கள் வழங்கிய ஆதரவின் உள்ளடக்கம் சமண. பௌத்த துறவிகளின் தேவைக்கானதேயன்றி அவைகளை தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கான நோக்கமுடையதல்ல, இதை மெய்பிக்கும் வகையில் தான்  இவ்விரு சமயங்களின் பரப்புரையும் தமிழின் வாயிலாகத்தான் மேற்கொள்ளப்பட்டது என்பதும் அக்காலத்தில்  தமிழில் இயற்றப்பட்ட சமண. பௌத்த நூல்களே இதற்கு சான்றுகளாகவும்  உள்ளன. எனவே  களப்பிரர்கள் கன்னடர்கள் என்று கூறும் இவர்களின் வாதமும், கூற்றும் எவ்வகையிலும் பொருந்தவில்லை. அதே நேரத்தில் இவைகள் தமது முதாதையர்களின் இழிசெயலை மூடிமறைப்பதற்காகவே இவர்கள் இட்டுக்கட்டி கூறும் கட்டுக்கதைகளேயாகும்,
பார்ப்பன கும்பல் மட்டுமல்ல உலகெங்குமுள்ள  மனித குல விரோதிகளும் கையாளும் தந்திரங்கள்தான் இவைகள்.
தற்போது இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு போராட்டத்தையும் ஒடுக்குவதற்கு மாவோயிஸ்டுகளோடும், இசுலாமிய தீவிரவாதிகளோடும் தொடர்புப்படுத்தும் ஆட்சியாளர்களின் செயலின் ஒரு அங்கம் தான் மேற்கண்ட வரலாற்று ஆய்வாளர்களின் செயல்களும் ஆகும்,
நாம் வாழும் காலத்திலேயே அதிலும் தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சி விண்ணைத்தொட்டுவிட்ட இந்தக் காலத்திலேயே     முற்றிலும் உண்மைக்குப் புறம்பான வகையில் கூடங்குளம் போராட்டத்தையே மாவோயிஸ்டுகளோடு தொடர்புபடுத்தி ஆட்சியாளர்களால் சித்தரிக்க முடிகிதென்றால் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய களப்பிரர் வரலாற்றை திரித்துக் கூறுவதற்கு பார்ப்பனக்கும்பலுக்கு யாராவது கற்றுத்தரவா வேண்டும்.
களப்பிரர் ஆட்சி மட்டுமல்ல உலக வரலாற்றில் ஆட்சிகள் அழிந்து போவதும், அழிக்கப்படுவதும் அதிசய நிகழ்வுகளல்ல. இதே போன்று தான்  அன்று நிலவிய சமூக அடித்தளத்தின் காரணமாக களப்பிரர் ஆட்சியும் அழிக்கப்பட்டுள்ளது.
ஆனால், களப்பிரர்கள் அழிக்கப்பட்ட முறைதான்  உலக வரலாற்றில்  தனித்துவமான  நிகழ்வாகும். ஆட்சியாளர்கள் ஆட்சிக்கட்டிலில் இருந்து தூக்கியெறியப்படுவதும், அழிக்கப்படுவதும் உலக வரலாற்றில் நாம் காண்பதுதான். ஆட்சியாளர்கள் மட்டுமல்ல அவர்களை ஏற்றுக்கொண்டவர்களையும் அவர்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இல்லாத வகையில் அழிக்கப்பட்டதுதான் களப்பிரர்கள் அழிக்கப்பட்ட வரலாற்றின் சிறப்புத்தன்மை ஆகும்.
களப்பிரர்கள் அழிக்கப்பட்ட ஏறத்தாழ அதே முறையில் ஈழத்தில் விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்கள் என்று ஆட்சியாளர்களால் கருதப்பட்டவர்களும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட இருச்சம்பவங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகால இடைவெளியை  கொண்டிருந்தாலும் இவ்விரு அழிப்பிற்கிடையிலும் மிக நெருக்கமான உறவுகளும்,தொடர்புகளும்   உடையதாக உள்ளது என்பதையும் அன்று முதல் இன்று வரை தமிழனின் எந்தவொரு  போராட்டமும் வெற்றி பெறவே இல்லை என்பதையும், இதன் மூலம் தோல்வியே தமிழனின் வரலாறாக உள்ளதையும், அதற்கான காரணங்களையும் அடுத்தத்  தொடரில் பார்ப்போம்.                                                                                           

தொடர்புடைய கட்டுரைகள்:

 

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

0 comments: