விவசாயம்

,விவசாயத்தின் அழிவு மொத்த சமூகத்தின் அழிவிற்கான அடையாளமாகும்


Pages

Sunday, 13 November 2011

விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -3

சென்றத் தொடரில் முதலாளித்துவ உலகின் மீளமுடியாத நெருக்கடிகள் பற்றியும் இந்த நெருக்கடிகள் இந்தியாவை பாதிக்காதவாறு நமது நாட்டு ஆட்சியாளர்கள் திறம்பட சமாளித்துவிட்டதாக கூறுவது எப்படிபட்ட மோசடி என்பதையும் சுட்டிக்காட்டி இருந்தோம்.
இந்தியாவில் உள்ள 100 கோடி மக்களின் வாழ்வையும்,உழைப்பையும்,எஞ்சியுள்ள வாங்கும் திறன் படைத்த 20 கோடி பேர் தமது சுயலாபத்திற்காக அன்னிய மேலை ஏகாதிபத்தியங்களுக்கு காட்டிக்கொடுத்தும்,கூட்டிக்கொடுத்தும் சுகபோகமாக வாழும் இழிவைப் பற்றியும் எழுதியிருந்தோம்.


இந்தியாவின் வளர்ச்சி என்று ஆட்சியாளர்கள் கூறும் கூற்றுக்கு பெரும்பான்மை மக்களின் வளர்ச்சி என்பது பொருளல்ல.பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியைத்தான் இந்திய ஆட்சியாளர்கள் வளர்ச்சி என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்து அழைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.இப்படி அழைக்கும் நிறுவனங்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு இலவசமாக தண்ணீரையும்,மின்சாரத்தையும் வழங்குவதோடு நிலத்தையும் இலவசமாக வழங்குகின்றனர்.அவர்களின் நிறுவனங்களுக்கும்,அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் வரிவிதிப்பு இல்லாமல் சலுகை காட்டுகின்றனர்.இப்படி அனுமதிக்கப்படும் பெரும்பான்மையான நிறுவனங்கள் இந்திய அரசு வழங்கும் சலுகைகளை அனுபவிப்பதற்காகவே ஒப்புக்கு நிறுவனங்களை துவக்குகின்றனர்.ஐந்தாண்டுகளின் முடிவில் நிறுவனத்தின் பெயரையே மாற்றிக்கொண்டு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சலுகைகளை அனுபவிக்கின்றனர்.

இந்த நிறுவனங்களை அழைத்து வந்து மேற்கண்ட சலுகைகளை எல்லாம் ஆட்சியாளர்கள் கொடுத்த போதும் இந்நிறுவனங்களால் நமது நாட்டிற்கு ஒரு பைசா கூட வருவாய் ஏதுமில்லை.உண்மையிலேயே பொருளுற்பத்தியில் ஈடுபடும் அன்னிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருவதற்கான அடிப்படையே பொருளுற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை மலிவாக ஆட்சியாளர்கள் தருவதையும்,உலகிலேயே மிக மலிவான மனித உழைப்பை கொள்ளையிடவும்தான்!

தற்போது இந்திய அரசின் கைகளில் உள்ள அன்னிய செலாவணியில் பெரும்பகுதி பங்கு சந்தை சூதாட்டம் மூலம் கிடைத்ததுதான்.பங்கு சந்தை மூலம் கிடைக்கும் அன்னிய செலாவணி நாயிடம் கிடைத்த தேங்காயை போன்றதுதான்.இருக்கும் அன்னிய செலாவணியை இருக்கிறது என்று சொல்லிக்கொள்ள முடியுமே தவிர அதில் ஒரு டாலரைக்கூட எடுத்து செலவு செய்ய முடியாது.பங்கு சந்தை எப்போது விழுந்தாலும் அப்போது பங்கு சந்தையில் இருந்து அன்னியர்கள் தமது முதலீட்டை திரும்ப எடுக்கும் போது அவர்களுக்கு திருப்பித்தரப் படவேண்டியதாகும்.ஆகவே தான் தேங்காயை உருட்டிச்செல்லும் நாயைப்போன்று அன்னிய செலாவணியை நமது ஆட்சியாளர்கள் உருட்டிக்கொண்டுதான் அலைய முடியும் என்று கூறுகின்றோம்.

எஞ்சிய அன்னிய செலாவணியை, இந்தியாவின் இயற்கை செல்வ வளத்தை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவாக தரைவார்த்ததன் மூலம் கிடைத்ததுதான்.இந்தியாவின் கார்ப்பரேட நிறுவனங்கள் என்று சொல்லப்படும் இந்திய கார்ப்பரேட் மாமாக்களின் நிறுவனங்கள் மூலம் மிகவும் சொற்ப அளவிற்கே அன்னிய செலாவணி ஈட்டப்படுகிறது.இந்த மாமாக்கள் தமக்கு கிடைக்கும் அன்னிய செலாவணியின்  பெரும்பகுதியை அன்னிய வங்கிகளில் முதலீடு செய்வதுடன்,பல்வேறு நிதி முறைகேடுகளின் மூலம் சட்டத்தின் கண்களில் இருந்து மறைத்து இந்தியாவிற்கு கள்ளத்தனமாக கடத்தி வருகின்றனர்.

இந்திய மக்களின் உழைப்பை மட்டுமல்ல,மக்களின் அற்ப சேமிப்பையும் இந்திய ஆயுல் காப்பீட்டு நிறுவனம், வங்கிகள் மூலம் கடனாகப் பெற்று இந்த மாமாக்கள் ஏப்பமும் விடுகின்றனர்.இவர்கள் தாங்கள் வாங்கியக் கடனை ஒருபோதும் திருப்பி செலுத்துவதே கிடையாது.(உதா:- கிங்பிஷர் நிறுவனத்துக்கு தற்போது இருக்கும் மொத்த கடன் 7057 கோடி ரூபாய். கிங்பிஷர் நிறுவனம் தற்போது சந்தித்துள்ள மொத்த நஷ்டம் மார்ச் 31 அன்று உள்ளபடி 4283 கோடி ரூபாய். இந்நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்து இது வரை ஒரு பைசா கூட லாபமாக சம்பாதிக்கவில்லை. 20011 தொடக்கத்தில், கிங்பிஷர் நிறுவனத்துக்கு கொடுக்கப் பட்ட கடன் திரும்ப வசூல் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளை, கடனுக்கு பதிலாக கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக் கொள்ளச் சொல்லி பரிந்துரைத்தது.

அந்தப் பரிந்துரையின் அடிப்படையில், தேசியமயமாக்கப் பட்ட 13 வங்கிகள் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகளை ஒரு பங்கு 63 ரூபாய்க்கு (அப்போதைய கிங் பிஷர் பங்கு மதிப்பு ரூ.40) தற்போது கிங்பிஷர் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.19.65. வங்கிகளுக்கு தரவேண்டிய கடன் தொகை போக, கிங்பிஷர் நிறுவனம், தேசிய எண்ணை நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை என்ன தெரியுமா ? இந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்துக்கு 600 கோடி. பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு 250 கோடி (BPCL) இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு (IOCL) 200 கோடி. எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்ற காரணத்தால், வாரத்திற்கு ஒரு முறை பெட்ரோல் விலையை உயர்த்தும் நிதி அமைச்சகமும், பெட்ரோலியத் துறை அமைச்சகமும் மல்லையாவிடம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்பது அவர்கள் மனசாட்சிக்குத் தான் தெரியும்) நன்றி:- முகநூல் நண்பர் Rajamanickam Veera
 இக்கடன்களை ரகசியமாக தள்ளுபடி செய்துவிடும் ஆட்சியில் உள்ள நமது மாமாக்கள், பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு தருகின்ற கடனை மட்டும் பெரிதுபடுத்திகாட்டுகின்றனர்

குறிப்பாக விவசாயிகளுக்கு தரப்படும் கடன்களைத்தான் ஆட்சியாளர்கள் பூதாகரமாக வெளியில் காட்டுகின்றனர்.விவசாயிகளுக்கு தரப்படும் கடன்களும்,மானியங்களும் விவசாயிகளின் பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தரப்படுபவைதான்.இக்கடன்கள் மூலம் எந்த ஒரு பயன்களையும் விவசாயிகள் பெறுவதில்லை.அப்படியே தரப்படும் கடன்களும் விவசாயிகள் ஒவ்வொரு போகத்துக்கும் தனியாரிடம் பெறும் கடனோடு ஒப்பிடும் போது மிகவும் சொர்ப்பம்தான்.பெரும்பான்மையான விவசாயிகள் கந்துவட்டி கும்பலிடம் பெறும்கடனையும் ,உரக்கம்பெனி முதலாளிகள் மற்றும் இடைத்தரகர்களும்தான் உறிஞ்சிக்கொள்கின்றனர்.

கந்துவட்டி கடன் வலையில் சிக்கிக்கொண்ட விவசாயிகளில், இந்தியா முழுக்க கடந்த பதினைந்து ஆண்டுகளில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 913 பேர் தற்கொலை செய்துகொண்டதாக இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது இந்திய அரசின் கணக்குத்தான்.உண்மையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் உண்மையான எண்ணிக்கை இதை விட இரண்டு மடங்காகும்.

இந்தியாவில் விவசாயிகள் விவசாயம்  செய்ய முடியாது என்ற நிலையை 1947-ல் இருந்து இன்றுவரை நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் மாமாக்கள் உருவாக்கிவிட்டுள்ளனர்.
இந்திய ஆட்சியாளர்களின் இந்த அநீதிக்கும்,அக்கரமத்துக்கும் எதிராக போராடி வெற்றி பெறுவதே ஒரே வழியாகும்.விவசாயத்தில் இருந்து வெளியேறிவிட்டால் இந்தியாவில் உள்ள 80 கோடி விவசாயிகளுக்கும் மாற்று வேலை வாய்ப்பு தரக்கூடிய துறைகள் நாட்டில் ஏதுமில்லை.இன்று வரை இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்க்கைக்கான ஆதாரமே விவசாயம்தான்.

விவசாயத்தில் இருந்து வெளியேறி நகரத்துக்கு ஓடும் விவசாயிகள் நகர்ப்புறங்களில் கட்டுமான பணிகளில்தான் பெருமளவு ஈடுகின்றனர்.இக்கட்டுமானப் பணிகள் முடிந்தவுடன் புதுப்பொலிவுடன் நகரை அழகூட்டிய இவர்களை நகரின் அசிங்கமான சின்னங்கள் என்று வெளியே தூக்கியெறியப்படுகின்றனர்.

இப்படி துரத்தப்படும் மக்கள் மீண்டும் நகரங்களை நோக்கி வராமல் இருப்பதற்குத்தான் நூறு நாள் வேலைத்திட்டத்தையே கிராமப்புறங்களில் ஆட்சியாளர்கள் செயல்படுத்துகின்றனர்.நூறு நாள் வேலைத்திட்டத்தின் மூலம் விவசாயிகளை நகரங்களுக்குள் வராமல் தடுக்கும் அதே நேரத்தில்  கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள்,பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றை பராமரிக்கும் பொருப்பில் இருந்தும் மத்திய,மாநில அரசுகள் நழுவிக்கொள்கின்றன.இதன் மூலம் கிராமப்புறங்களை இந்திய ஆட்சியாளர்கள் முற்றாக புறக்கணிக்கும் செயலை மிகவும் தந்திரமான முறையில் செயல்படுத்துகின்றனர்.

ஆட்சியாளர்களின் இந்த கேடுகட்ட தனத்தை ஆழமாகவும்,நுட்பமாகவும் புரிந்து கொண்ட தோழர் மூடக்கிழவன் தலைமையிலான குழுவினர், விவசாயிகள் மத்தியில் விரிவான ஆய்வுகளை நடத்தி விவசாயத்தில் உள்ள பிரச்சனைகளையும அதை தீர்ப்பதற்கான நுட்பமான மாற்றுத்திட்டத்தையும், கோரிக்கை வடிவில் வடித்துள்ளனர்.இக்கோரிக்கைகளை ஐந்து அம்ச கோரிக்கைகளாக வரிசை படுத்தியுள்ளனர்.

இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை தாம் சார்ந்திருந்த விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் தலைமைக்கு கொடுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக, அதை அமைப்பில் செயல் படுத்தக்கோரி போராடி வந்தனர்.ஆனால் அந்த அமைப்பினரோ இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை பொருளாதார கோரிக்கைகள் என்றும்,அரசியல் கோரிக்கை இல்லை என்றும் இதன் மூலம் மக்களை புரட்சிக்கு அணிதிரட்ட முடியாது என்றும் கூறி கொச்சைப்படுத்தினர்.இறுதியாக சென்ற ஆண்டு நடைபெற்ற அமைப்பின் உயர்மட்ட கூட்டத்தில் இக்கோரிக்கைகள் மீதான விவாதத்தை தவிர்ப்பதற்காக ஐந்து அம்ச கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறி அக்கோரிக்கைகளை முடக்கி வைத்தனர்.இதன் மூலம் இந்த அமைப்பினர் இந்திய விவசாயிகள்,விவசாய பிரச்சனைகள் அதை தீர்ப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை பற்றி தமது அறியாமையையும்,மூடத்தனத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.தமது நகர்ப்புற குட்டிமுதலாளிய வர்க்க இயல்பையே இதன் மூலம் அம்பலப்படுத்திக் கொண்டனர்.

 ஒரு கோரிக்கை அரசியல் கோரிக்கையா,பொருளாதாரக் கோரிக்கையா என்பதை அக்கோரிக்கையின் வார்த்தை மற்றும் வடிவத்தை வைத்து தீர்மானிக்கக் கூடாது.அதற்கு மாறாக நிலவுகிற சமூக அமைப்பில் இக்கோரிக்கைகள் நிறைவேறக்கூடியதா,இல்லையா என்பதில் இருந்துதான் இது அரசியல் கோரிக்கையா,பொருளாதாரக் கோரிக்கையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என்ற ஆசான் மாவோவின் வரையறுப்பை சுட்டிக்காட்டிய பின்பும் அதை மெளனமாக,ஓசை படாமல் நிராகரித்து விட்டனர்.

அந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை கீழே தொகுத்து தருகிறோம்.இந்த கோரிக்கைகள் நிலவுகிற சமூக அமைப்பிலேயே நிறைவேறக்கூடியதா, இல்லையா என்பதையும், இதன் மூலம் 80 கோடி விவசாயிகளின் வாழ்வில் விடிவு பிறக்குமா,பிறக்காதா என்பதையும், இந்த கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்திய விவசாயிகளின் வாங்கும் சக்தி அதிகரித்து இந்திய பொருளாதாரம் புத்துயிர் பெறுமா,பெறாதா என்பதையும் கூறுமாறு வாசகர்களை கோருகிறோம்.

இப்போது கூறுங்கள் இந்த ஐந்து அம்ச கோரிக்கைகள் நியாயமானதா,சரியானதா, இல்லையா என்பதை…………..

ஐந்து அம்ச கோரிக்கைகள்

மத்திய, மாநில அரசுகளே!

1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!

2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!

3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கே வழங்கு!

4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!

5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையை ஏற்படுத்து.

மேற்கண்ட ஐந்து அம்ச கோரிக்கைகள் நாட்டின் விவசாயத்தையும்,விவசாயிகளின் வாழ்வையும் மேம்படுத்தி அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த சமூக,அரசியல்,பொருளாதாரத்தை புத்துயிர் பெறச்செய்யும்.மேலும் ஒவ்வொரு கோரிக்கைக்குள்ளும் பொதிந்துள்ள ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை பற்றியும் அடுத்தத் தொடரில் பார்ப்போம்…………

தொடர்புடைய கட்டுரைகள்:


1.விவசாயிகள்:நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் -1



2.விவசாயிகள்: நாட்டின் சட்டபூர்வ கொத்தடிமைகள்! பாகம் 2


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 comments:

ப.கந்தசாமி said...

உங்கள் தளத்தை என் பார்வைக்கு கொண்டு வந்ததிற்கு மிக்க நன்றி. பல அருமையான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள். ஆழமாகப் படிக்கவேண்டும். படிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.