ஐந்து அம்ச கோரிக்கைகள்:-
மத்திய ,மாநில அரசுகளே!
1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் அறிவித்து நடைமுறைப்படுத்து!
2.நிலப்பிரபுக்கள்,மடங்கள்,ஆதீனங்கள்,கோயில்கள் ,நவீன கால நிலப்பிரபுக்களான கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும் பணக்கார்ர்கள் வாங்கி குவித்துள்ள நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை கூலி ஏழைவிவசாயிகளுக்கு பிரித்து வழங்கு!
3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமையை விவசாயிகளுக்கேவழங்கு!
4.ஒவ்வொரு சாகுபடிக்கும் ஆகும் முழுச்செலவையும் விவசாயிகளுக்கு கடனாக வழங்கு!
5.நாடு முழுக்க விவசாய விளை பொருட்கள் அனைத்தையும் அரசே கொள்முதல் செய்யும் முறையைஏற்படுத்து.
மேற்கண்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் விவசாயம் லாபகரமான தொழிலாக மாற்றப்படும்.இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் பெருகி அவர்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்,ஆனால் இன்றைய நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது.இந்தியாவில் உள்ள ஆகப்பெரும்பான்மையினரான விவசாயிகள் வாயை கட்டி,வயிற்றை கட்டித்தான் வாழ்ந்துகொண்டுள்ளனர்.இதன் மூலம் விவசாயிகள் நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவு உற்பத்தி செய்தாலும், தாங்கள் மட்டும் வாயையும்,வயிற்றையும் கட்டித்தான் வாழவேண்டியுள்ளது.ஆக மொத்தத்தில் விவசாயிகள் தமது உணவு தேவையைக்கூட முழுமையாக அடைய முடியாத அளவுக்குத்தான் அவர்களின் வாங்கும் சக்தியுள்ளது.
அந்தக் காலத்தில் விவசாயிகளின் உழைப்பை நிலப்பிரப்புக்கள் சுரண்டி கொழுத்தனர். இப்போது தமிழகத்தை பொருத்தவரை உரம்,பூச்சி மருந்து முதலாளிகளும்,இடைத்தரகர்களும் தான் விவசாயிகளின் உழைப்பை உறிஞ்சிக்கொள்கின்றனர்.இவர்கள் போதாது என்று உள்நாட்டு,வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளையும் களத்தில் இறக்கிவிட்டுள்ளது இந்திய அரசு. இப்போது கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும்பணக்கார்கள் தான் நவீன கால நிலப்பிரப்புக்களாக உருவெடுத்துள்ளனர்.இவர்களிடம்தான் ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் தற்போது உள்ளது.
நமது ஆட்சியாளர்களின் இந்த, நாட்டுக்கு விரோதமான,மக்களுக்கு விரோதமான மேற்கண்ட நடைமுறையை முறியடித்து மக்களையும், நாட்டையையும் பாதுகாப்பதற்கும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும், இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தக் கோரி நாட்டில் உள்ள உழைக்கும் மக்களாகிய 100 கோடி பேரையும் ஒருங்கிணைப்பதுதான் இப்போதைய நமது தலையாயப் பணியாகும்.
இதை சாதிப்பதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பானமை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியும்.மக்களின் வாங்கும் சக்தி எந்த அளவிற்கு உயர்த்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு அவர்களின் உணவுத் தேவை பூர்த்தி அடைந்து, நவீன வாழ்க்கைக்கான பொருட்களை வாங்கும் சக்தி உருவாகும்.இதனால் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி, இப்போது இருப்பதை விட பன்மடங்கு உயரும்.தொழிற்துறை உற்பத்தி எந்த அளவிற்கு உயர்கிறதோ, அந்த அளவிற்கு தொழிலாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
விவசாயம் லாபகரமான தொழிலாக மாற்றப்படுவதும்,தொழிற்துறை உற்பத்தி பன்மடங்கு பெருகுவதாலும் விவசாயத்தை நவீனமாக்க வேண்டியது கட்டாய தேவையாகிவிடும்.இப்படி விவசாயம் நவீனமாக்கப்படும் போது விவசாயத் தேவைக்கே பல லட்சக்கணக்கான டிராக்டர்களையும்,நடவுக்கான எந்திரம்,அறுவடைக்கான எந்திரம் ஆகியவற்றையும் உற்பத்தி செய்ய வேண்டும்.இதற்கு ஏற்ப விவசாயத்திற்கு தேவையான எந்திரங்களை உற்பத்தி செய்வதற்கே, ஏராளமான தொழிற்சாலைகளை உருவாக்கியாக வேண்டும்.
விவசாயமும் ,தொழிற்துறையும் புத்துயிர் பெறுவதால், நாட்டில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவரின் உழைப்பு சக்தியும் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படுகிறது.நிலையான வேலை வாய்ப்பும், வருவாய் பெருக்கமும்,உள்நாட்டில் நிலையான உத்திரவாதமான, சந்தை உருவாவதற்கு அடிகோலுகிறது.இதனால் உள்நாட்டு சந்தைக்கான பொருளுற்பத்தி முதன்மையானதாக ஆக்கப்படுகிறது.உள்நாட்டு சந்தைக்கான தேவை பூர்த்தி அடைந்த பின்னரே ஏற்றுமதிக்கான உற்பத்தி, அதாவது முக்கியத்துவமற்ற ஒன்றாக மாற்றப்பட்டுவிடும்.இதனால் இன்றைய முதலாளித்துவ உலகை ஆட்டிப்படைக்கும் பொருளாதார நேருக்கடிகளின் சாயல் கூட நம்மை அண்டாது!
இதோடு ஐந்து அம்ச கோரிக்கை ஒவ்வொன்றுக்குள்ளும் உள்ள ஆக்கபூர்வமான உள்ளடக்கத்தை இனி பார்ப்போம்.
1.விவசாயத்தை நாட்டின் தொழிலாகவும்,அத்தியாவசிய தொழிலாகவும் ஆக்குவதன் மூலம், இதை பாதுகாப்பது அரசுகளின் தலையாய கடமையாகிவிடும்.நாட்டின் கொடி,பறவை,விலங்கு என்று அறிவித்துள்ளவற்றை பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாக இருப்பதுபோல் விவசாயத்தை பாதுகாப்பதும் அரசுகளின் கடமையாகிவிடும்.
இதனால் விவசாயத்துக்கு அடிப்படையானதும், முதன்மையான தேவையும் ஆகிய பாசனத் தேவையை உருவாக்கித் தரவேண்டும்.இதற்கு நாட்டில் உள்ள நதிகளை இணைப்பது,மழை நீரை சேகரிப்பது ஆகியவற்றின் மூலம் இந்த இலக்கை அடைந்துவிட முடியும்.இதை நாடு முழுக்க உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் உழைப்பின் மூலமே நாடெங்கும் ஒரே சீராகவும்,பரவலாகவும் ஒரே நேரத்திலும் நடைமுறைப்படுத்த முடியும்.
மழை நீரை பெரும்அணைகள் கட்டித்தான் சேமித்து வைக்கும் முறை தற்போது உள்ளது.தமிழகத்தை பொருத்த வரை 2005-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 40 ஆயிரத்தி 319 ஏரிகள் உள்ளன.இதில் 40 ஹெக்டேருக்கும் அதிகமான 11 ஆயிரத்து 8 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும்,40 ஹெக்டேருக்கும் குறைவான பரப்பளவு உள்ள 29 ஆயிரத்து 311 ஏரிகள் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டிலும் உள்ளன.இந்த ஏரிகள் அனைத்துமே இன்றைய நிலையில் பராமரிக்கப் படாதவைகளாகவே உள்ளன.இதனால் 90 விழுக்காட்டுக்கும் மேல் தூர்ந்தும் ,ஆக்கிரமிக்கப்பட்டும், பாசன வாய்க்கால்கள் இருந்த இடம் தெரியாமலும் போய் விட்டுள்ளது.
இந்த ஏரிகள் அனைத்துயும் முழுமையாக பயன்படுத்துவதன் மூலம், பொழியக் கூடிய மழைநீரை பெருமளவு சேமித்துவைக்க முடியும்.
மேலும் புதிய ஏரிகள் ,குளங்கள்,குட்டைகள் ஆகியவற்றை உருவாக்குவதன் மூலமும், வீணாக கடலில் கலக்கும் மழைநீரையும் சேமித்து விவசாயத்திற்கும் ,குடிநீருக்கும் பயன்படுத்த முடியும்.இதனால் பெரிய அணைகள் பூகம்பத்தால் பாதிக்கப்படும் அபாயமும் இல்லாமல் போய்விடும்.
இப்படி செய்வதால் இன்று ஆழ்துளை கிணறு அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி, இன்னும் சில ஆண்டுகளிலேயே நிலத்தடி நீரே இல்லாமல் போய் தமிழகமே பாலைவனமாகும் அபாயத்தில் இருந்தும் பாதுகாக்க முடியும்.
மழை நீரை சேமித்து அதை விவசாயத்துக்கு பயன் படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாப்பதுடன் அதை மேம்படுத்தவும் முடியும்.
தமிழகத்தில் ஆழ்துளை கிணறுகள் மூலமே விவசாயத்திற்கான தண்ணீர் பெறுவது முதன்மையான பாசனமாக உள்ளதால் இதற்கான மின்சாரத் தேவையும் தேவையற்றதாகிவிடும்.இதோடு பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்,சலுகை விலையில் மின்சாரம் வழங்குவதையும் நிறுத்துவதன் மூலம் ஏராளமான மின்சாரம் சேமிக்கப்பட்டு, நமது நாட்டின் தொழிற்துறைக்கும், மக்களின் தேவைக்கும் பயன்படுத்த முடியும்.இதன் பிறகு விவசாயத்திற்கு மிக குறைந்த அளவே மின்சாரம் தேவைப்படும். மேலும் மழைநீரை பெருமளவு சேமிப்பதன் மூலம் சிறு,சிறு நீர்மின் திட்டங்களை உருவாக்கி ஏராளமான மின்சாரத்தையும் உற்பத்தி செய்யமுடியும்.
நாட்டின் முதன்மையான பாசனமாக மழைநீர் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீரும், சுற்றுச்சூழலும்,இயற்கையும் பாதுகாக்கப்படுகிறது.
2020-ம் ஆண்டுகளுக்கு பிறகு வடகிழக்கு பருவ மழையே இல்லாமல் போய்விடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இதற்கு சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தப்பட்டதும், செயற்கையாக மனிதர்களால உருவாக்கப்படும் மாசுகளை சரிசெய்யக்கூடிய இயற்கை காடுகள் அழிக்கப்பட்டதுமே காரணமாகும்.
இயற்கையாக கிடைக்கும் மழைநீரை பயன்படுத்துவதே முதன்மையான பாசனமாக மாற்றுவதன் மூலம் மழையை பெறுவதற்கு, அத்தியாவசியமான தேவையாகிய காடுகளை உருவாக்குவதும்,அதை பாதுகாப்பதும் சமூததின் ஒட்டுமொத்த கடமையாகிவிடும்.இப்படி சமூகம் மாறுவதுதான் உண்மையான நாட்டுப் பற்றாகும்.
நாட்டில் அனைவரும் வாழ்வதற்கான வேலை வாய்ப்பு உருவாக்கபட்டுவிட்டால்,நாட்டில் உள்ள அனைவரும் சமூக அக்கறை உள்ளவர்களாக, நாட்டு பற்று உள்ளவர்களாக யாரும் சொல்லித்தராமலேயே உருவெடுத்துவிடுவார்கள்.சமூக விரோத செயல்கள் அனைத்தும் முற்றாக சமூகத்தில் இருந்து களையப்பட்டு அமைதியான ,ஆக்கபூர்வமான, சமூக அடித்தளம் உருவாகும்.நாட்டின் மக்கள் தொகையே நாட்டின் பாதுகாப்பிற்கும் ,வளத்திற்குமான அடிப்படையாகவும், எஃகு கோட்டையாகவும் மாறிவிடும்.இதன் பின் நாட்டில் உற்பத்திற்கான போராட்டமே முதன்மையானதாக இருக்கும்.
2.விவசாயத்தை நம்பி உயிர் வாழ்பவர்களே விவசாயிகள் என்று வரையறைபடுத்துவதன் மூலம் விவசாயிகள் அல்லாதவர்களிடம் உள்ள நிலங்கள் அனைத்தும், விவசாயத்தை நம்பி அதையே தமது உயிர் வாழ்வதற்கான அடிப்படையாக கொண்டுள்ள கூலி, ஏழை விவசாயிகள் அனைவருக்கும் நிலம் வழங்குவதன் மூலம், இன்று சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கான சாதி,தீண்டாமைக்கான சமூக அடித்தளம் தகர்க்கப்பட்டு, சமத்துவ சமூகத்திற்கான சமூக அடித்தளம் உருவாக்கப்படுகிறது.
அனைவரும் மனிதர்கள் நமது சகோதரர்கள் என்ற சமத்துவ சிந்தனை உருவாகுவதன் மூலம் சமூகத்தில் அமைதியும்,மேம்பாடும் உத்திரவாதப்படுத்தப்படுகிறது.
நிலப்பிரபுக்களிடம் உள்ள நிலங்கள் என்று நாம் வரையறுப்பது மடங்கள், ஆதினங்கள்,கோயில்களில் உள்ள நிலங்களாகும்.மேலும் நவீன கால நிலப்பிரப்புகளான கார்ப்பரேட் முதலாளிகள்,நடிகர்கள்,பெரும் பணக்காரர்களிடம் உள்ள நிலங்களும்,அரசு புறம்போக்கு நிலங்களும் நிலமற்ற கூலி ,ஏழை விவசாயிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும்.விவசாயிகள் அல்லாதோர் அனைவரும் நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
3.விவசாய விளை பொருட்களுக்கான விலையை தீர்மாணிக்கும் உரிமை விவசாயிகளுக்கே வழங்குவதால் விவசாயிகளின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.இதனால் ஒட்டுமொத்தமாக நாட்டின் தொழிற்துறை உற்பத்தி,உள்நாட்டு உற்பத்தி-சுயசார்பான உற்பத்தி முதன் முறையாக உருவாகப்பட்டு மேம்பாடு அடையும்.
விவசாயிகள் தமது பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்க முடியும்.இப்படி படிப்பதால் அவர்கள் கட்டாயம் வேறு தொழில்களுக்கு செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.விவசாயத்தை தமது வாழ்வுக்கான தொழிலாக ஏற்க முடியும்.
விவசாயத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் படித்தவர்களாக மாறுவது விவசாயத்துறையில் உள்ள அனைத்து நுட்பங்களையும் கையாண்டு, நாட்டின் 120 கோடி மக்களுக்கும் மூன்று வேளைக்கும் தேவையான உணவு தானிய உற்பத்தியை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் உணவு பொருட்களை அளிக்கும் ஒரு நாடாகவும் இந்தியா மேன்மையுறும்.
அனைவருக்கும் நிலம்,அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கப்படுவதால் விவசாயம் உட்பட அனைத்து தொழிற்துறையும் நவீன எந்திரங்கள் மூலம் மேம்படுத்த வேண்டிய தவிர்க்கவியலாத தேவை உருவாகிவிடும்.
இன்று நாட்டின் பெரும் சுமையாக சித்தரிக்கப்படும் மக்கள் தொகை,நாட்டின் வளத்திற்கான அடிப்படையாக மாறிவிடும்.
நாட்டு மக்களின் சிந்தனாமுறையும்,பண்பாடும் விஞ்ஞான பூர்வமானதாக மாறி நாகரிகம்,கலை,கலாச்சாரம் அனைத்தும் புத்துயிர் பெறும்.
4.விவசாயிகளுக்கு அரசே விவசாயம் செய்வதற்கு தேவையான தொகையை முழுவதுமாக கடனாக வழங்குவதால், கந்து வட்டி கும்பலின் சமூக விரோத செயலை தடுத்து,மனிதனை மனிதன் எத்தி பிழைக்கும் சமூக விரோத செயல் தடுக்கப்பட்டுவிடும்.
இன்றைய நிலையில் ஒரு தொழிலுக்கு, ஒரு தொழில் எதிராகவும்,ஒரு பிரிவு மக்களுக்கு இன்னொரு பிரிவு மக்கள் எதிராகவும் உள்ள தன்மையும் மறைந்துவிடும்.
5.விவசாய விளை பொருட்களை அரசே முழுமையாக கொள்முதல் செய்து கொள்வதால் விவசாயிகளுக்கு வழங்கப்படும், கடன் தொகை முழுவதையும் அரசே எடுத்துக்கொண்டு,எஞ்சியத் தொகையை விவசாயிகளுக்கு வழங்கி விடமுடியும்.
விவசாயத்திற்கு வழங்கப்படுவதாக கூறப்படும் மானியங்கள் அனைத்தையும் இனியும் தரவேண்டிய அவசியம் ஏதுமில்லை.இந்த மானியங்களை மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்களுக்கு வழங்குவதன் மூலம் குறைவான விலையில் உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க முடியும்.
விவசாயிகள் தம்மிடம் உள்ள பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்க மாட்டார்கள்.தமது நவீனத் தேவையை நிறைவு செய்துகொள்ள செலவழிப்பார்கள்.
நேரடியாக அரசே நாட்டு மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்குவது, உணவு பொருட்களின் விலையை ஒரே சீராக வைத்திருப்பது என்பதும் சாத்தியம் ஆகும்.இடைத்தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபமே உணவு பொருட்கள் விலை ஏற்றத்திற்கான அடிப்படை காரணம் ஆகும்.இந்த அடிப்படை தகர்க்கப்பட்டு மக்களின் வாங்கும் சக்தி சீராக பராமரிக்கப்படுவது நாட்டின் வளர்ச்சியும் சீராக இருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
மேலே நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளவை அடிப்படையானதும்,குறிப்பானதும் மட்டுமே!
இவைகள் நடைமுறைக்கு வரும் போது, இதுவரை நாம் அறிந்திராத மாபெரும் சமூகத்தன்மை வாய்ந்தவைகளாக இவைகள் அமையும்.
இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை வென்றெடுப்பது விவசாயிகளின் தனிப்பட்ட, சொந்த விவகாரம் அல்ல.நாட்டின் நூறு கோடி உழைக்கும் மக்களின் கடமையுமாகும்.நாட்டில் வியாபாரம்,சிறு தொழில்கள்,விவசாயம் அனைத்தும் கார்ப்பரேட் மயமாகி 100 கோடி உழைக்கும் மக்களும் தமது வாழ்க்கையை இழப்பதற்கு எதிரான ஆளுவோரின் சதியை முறியடிப்பதற்கான, மாற்று திட்டம்தான் இந்த ஐந்து அம்ச கோரிக்கைகள்.
*சமூக அக்கறை உள்ள அனைவரும் இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை ஆழமாக பரிசிலனை செய்யுங்கள்!
*எம்மோடு தொடர்புகொள்ளுங்கள், அமைப்பாய் அணிதிரள்வோம்!
*நாட்டையையும்,இயற்கையையும்,நம்மையும் பாதுகாத்து கொள்வோம்!
தொடர்புக்கு :9842529188
தொடர்புடைய கட்டுரைகள்:

4 comments:
சாதிக்கு எதிரான அடி. நல்ல முயற்சி .உங்கள் போராட்திற்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு அடக்கு முறைக்கு எதிரான அடங்காத்தமிழன்.நன்றி http://adangathamilan.blogspot.com
adangathamilan@gmail.com
ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான். இந்தியா இந்தியா என்று நீங்கள் வேண்டுமானால் கூவிக்கொண்டிருக்கலாம். தமிழனை அன்றி ஒருவன் காதிலும் அது விழாது. ஏனென்றால் கூறுபவர் நீர் தமிழன் அல்லவா?
நண்பர் miracle அவர்களுக்கு,இந்தியா ஒரு தேசமல்ல.பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடம் என்பதே எமது நிலைப்பாடாகும்.அனைத்து தேசிய இனங்களிலும் உள்ள ஆளும்வர்க்கங்கள் தமக்கிடையில் ஆயிரமாயிரம் பிளவுகள் இருந்தாலும், உழைக்கும் மக்களை, ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதில் மட்டும் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.தமது முழு பலத்தையும் பயன்படுத்தி காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநிலங்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மிகவும் எளிதாக கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒடுக்கி வருகின்றனர்.இந்த ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறையை நாம் முறியடிக்க வேண்டுமானால்,இந்தியா முழுக்கவுள்ள அனைத்து தேசிய இனங்களின், உழைக்கும் மக்களும் தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது இன்றியமையாத அவசியமாகும்.இந்த ஒருங்கிணைப்புதான் நம்மை வெற்றியை நோக்கி இட்டுச்செல்லும்.இதன் பிறகே ஒவ்வொரு தேசிய இனமும் தமது சுயநிர்ணய உரிமையைப்பற்றியே சிந்திக்க முடியும்.இந்த ஒருங்கிணைப்பின், வெற்றியின் பெயர்தான் புதிய ஜனநாயக புரட்சியாகும்.
வாருங்கள் அனைத்து தேசிய இனங்களும் ஒருங்கிணைவோம்! இந்திய ஆளும்வர்க்கங்களை முறியடிப்போம்! தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமையை வென்றேடுப்போம்! நன்றி.
மிகவும் சரியான பதில் இது இலங்கைக்கும் பொருந்தும். இலங்கையில் இனரீதியிலான ஒடுக்குமுறை தான் இன்னமும் பிரதான முரண்பாடாக இருக்கின்றது. இதனை முறியடிக்க ஒரே வழி அனைத்து இன உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி ஆளும் இனவாத மற்றும் ஏகாதிபத்திய நலன்பேணும் அரசினை அடித்து விரட்டுவதற்க்கான புதிய ஜனநாயகப் போராட்டமே. இங்கு தான் ஒவ்வொரு தேசிய இனத்தினதும் தனித்துவங்கள் மதிக்கப்படும். அத்தோடு போராட்டமும் வெல்லும்
இதுவல்லாது வெறுமனே தமிழ்த் தேசியத்தினை உயர்த்திப் பிடித்து மல்லுக்கு நின்றால் கடந்த காலத்தில் எவ்வாறு இலகுவாக இலங்கை இனவாத மற்றும் ஏகாதிபத்திய நலன் பேணும் ஆட்சியாளர்களாலும் அவர்களின் எஜமானர்களாலும் அழித்தொழிக்கப்பட்டோமோ அதுவே திரும்பத் திரும்டப தொடர் கதையாக அமையும்.
தமிழ் தேசியம் பேசி மக்களை இரத்தக் கொதிப்புக்குள் வைத்து தமிழ் முதலாளிகள் தங்களின் பணப்பையினை நிரப்பியது போதும்
Post a Comment