மது அருந்துவதைப்பற்றி இதுவரை மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளோம்.இரண்டு மற்றும் மூன்றாவது கட்டுரைகளில் மது பற்றி தந்தை பெரியாரின் குடியரசு இதழ் தலையங்கங்களை தந்தோம்.
தந்தை பெரியார் மது விலக்கின் தேவை,அவசியத்தை விளக்கி 16.08.1925 –ம் ஆண்டு குடியரசு இதழ் தலையங்கத்தில்………
“இந்த பன்னிரண்டரை கோடி ரூபாய் நமது இராஜதானியில் கள்,சாராயத்திற்கு ஆக மூன்றை கோடி சனங்களால் செலவு செய்யப்படுகிறது.இது அல்லாமல் ஏழை மக்களால் குடியின் பொருட்டு களவு-சூது-பொய்-கொலை-கொள்ளை முதலிய காரியங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு? கோர்ட்டு,வக்கில்,லஞ்சம்,சப்ளை மாமூல் வகைகளில் ஆகும் செலவு எவ்வளவு?
மக்கள் ஒழுக்கம்,கற்பு முதலிய குணங்கள் ஒழிந்து தேசத்திலும், நாட்டிலும் குடும்பத்திலும் ஏற்படும் ஒற்றுமை குறைவுகள் எவ்வளவு?” என்று எழுதியுள்ளார்.
மதுவினால் சமூக,பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை,பண்பாடு,ஒழுக்கம் ஆகியவற்றில் எப்படியான பாரதூரமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை மேற்கண்ட கட்டுரையில் தந்தை பெரியார் கூறியுள்ளதை பார்த்தோம்.இதை வெறுமனே தனது கருத்தாக மட்டுமல்லாமல் அக்கருத்துக்கு ஆதாரமாக அசைக்கமுடியாத, துள்ளியமான புள்ளிவிவரங்களுடன் மேற்கோள் காட்டித்தான் மது விலக்கின் அவசியம் தேவையை வலியுறித்தியுள்ளார்.
இப்படி எழுதிய தந்தை பெரியார் தான் பின்னாளில் மது விலக்குப்பற்றிய தனது கருத்தை மாற்றிக்கொண்டார்.இதை வாசகர்கள் சிலரும் எமக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
தந்தை பெரியார் அவர்கள் மது விலக்குத் தேவையில்லை என்று முடிவு செய்ததற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி பின்னர் பரிசிலிப்போம்.அதற்கு முன்னர் வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ள படி தந்தை பெரியார் மது விலக்குப்பற்றிய 1925-ம் ஆண்டு வரையிலான தனது நிலைப்பாட்டை அதன் பின்னர் மாற்றிக்கொண்டார் என்றே வைத்துக்கொள்வோம்.அதற்காக நாமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
தந்தை பெரியார் தனது கருத்தை பின்னாளில் மாற்றிக்கொண்டதாலேயே 1925 குடியரசு தலையங்கத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி எழுதியுள்ளவை இல்லை என்றாகிவிடுமா?அல்லது ’அப்படி தான் எழுதியது தவறு, சிலர் இட்டுக்கட்டி தந்த செய்தியை தகுந்த பரிசிலினை செய்யாமலேயே நம்பி எழுதிவிட்டேன்.ஆகையால் இப்போது எனது கருத்தை மாற்றிக்கொள்கிறேன்’, என்று மது விலக்குப்பற்றிய தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட போது ஏதாவது எழுதியிருக்கிறாரா?
”தோப்பிற்கே சென்று கள் குடித்தால் அதில் அதிக போதை இல்லாமல் இருந்தது”,என்று அவர் கூறியுள்ளதை நாங்கள் இல்லை என்று மறுக்கவில்லை.இப்படி அவர் கூறியுள்ளதானலேயே ’கள்’ குடிக்கலாம் என்று அவர் கூறியதாக எடுத்துக்கொள்ள முடியாது.அவர் மேற்கண்டவாறு மட்டும் கூறவில்லை.அதோடு “கள் வருமானத்திற்கான வழியாக சர்க்கார் ஆக்கிக்கொண்ட பிறகுதான் அது போதை பொருளாக ஆகிவிட்டது”, என்றும் கூறியுள்ளார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
அதாவது அரசு தனது வருவாயை பெருக்கிக்கொள்ள மதுவை ஒரு சாதனமாக தேர்ந்தெடுத்த பிறகுதான் அது அதிக போதை தரும் பொருளாக மாறியதற்கான காரணம் என்ன என்பதையும் நாம் உற்றி நோக்க வேண்டும்.
’கள்’ மூலம் அரசுக்கு வருவாய் தொடர்ந்து வரவேண்டுமானால் குடிகாரர்கள் தொடர்ந்து குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அப்படி அவர்கள் தொடர்ந்து குடிக்க வேண்டுமானால் அதற்கு அவர்கள் அடிமையாக வேண்டும்.மொத்தத்தில் மதுவினால் குடிகாரர்களின் உடலும்,உள்ளமும் அடிமையாக வேண்டும்.இப்படி அவர்கள் அடிமையாவதற்கு ’கள்’ என்பது அதிக போதை தரும் ஒன்றாக இருக்கவேண்டும்.இந்த அதிக போதையை செயற்கையாகத்தான் உருவாக்க வேண்டும்.
மேற்கண்ட அணுகுமுறையை அரசு மட்டுமல்ல அரசு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் போதும் குடிகாரர்களின் தேவையை நிறைவு செய்யும் சமூக விரோத கும்பலுக்கும் அவசிய தேவையாய் இருக்கிறது.
எனவே ’கள்’ வருமானத்துக்கான வழியாக இருக்கும் வரை – அதாவது நிலவுகிற சமூக அமைப்பு நீடிக்கும் வரை- அது போதை பொருளாகத்தான் இருக்கும்.அரசு மது விலக்கை நடைமுறைப்படுத்தினாலும் அது எப்படியும் குடிகாரர்களுக்கு கிடைத்தே தீரும்.அதை ஒருக்காலும் எவராலும் தடுத்து விட முடியாது.
இதுதான் அசைக்க முடியாத உண்மை என்கிற போது,மதுவினால் எந்த அளவுக்கு அரசுக்கும்,சமூக விரோதிகளுக்கும் வருவாய் பெருகுகிறதோ, அதன் எதிர் விளைவாக சமூக தீமைகளும் அதற்கு இணையாக பெருகவே செய்யும்.இதுதான் நிலைமை என்கிற போது தந்தை பெரியார் மது விலக்கு தேவையில்லை என்று கூறினார் என்பதற்காக, நாமும் அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று கருதுவது எப்படி சரியாக இருக்க முடியும்?
தந்தை பெரியார் மேற்கண்ட சமூகத் தீமைகளை கணக்கில் கொள்ளாமலேயே மது விலக்கு பற்றிய தனது நிலையை மாற்றிக்கொண்டிருந்தால், அதை விமர்சிக்கவும்,கண்டிக்கவும் வேண்டுமே தவிர அதை அப்படியே ஏற்க வேண்டும் என்று கருதுவது மூடத்தனமாகும்.
ஒரு மனிதனின் கருத்துகள் அம்மனிதனின் வயது முதிர்வுக்கு ஏற்ப முதிர்ச்சி அடையும் என்பது பொதுவானதொரு கருத்தே தவிர அது முழுமையான விஞ்ஞான பூர்வமான உண்மையல்ல.வயது முதிர்ச்சி,கருத்து முதிர்ச்சியாக மாறுவது,உருவாவது என்பது அனைவருக்கும் பொதுவான கோட்பாடல்ல.அது ஒவ்வொரு தனி மனிதனின் சமூக வாழ்வின் தன்மையில் இருந்து மாறக்கூடிய ஒன்றாகும்.
இது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்துவதை போன்று தந்தை பெரியாருக்கும் பொருந்தும்.
ஆனால் உண்மையில் மது பற்றிய 1925 வரையிலான தனது கருத்தை பின்னாளில் தந்தைபெரியார் மாற்றிக்கொண்டிருந்தால் அது பிழையானதொரு கருத்து மாற்றம் என்று தான் வரையறுக்க முடியும்.
ஆனால் சில வாசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளதை போன்று தந்தைபெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பிறகு மது பற்றிய தனது கருத்தை தலைகீழாக மாற்றிக்கொள்ளவில்லை என்பதை அவரின் எழுத்தில் இருந்தே இனி பார்ப்போம்.
“காங்கிரசாரின் போலி மது விலக்கு முறையை சென்னை சர்க்கார்,வரப்போகும் வருடம் முதல் மாற்றிவிடக்கூடும் என்பதாக தெரிகிறது”.
“நம் மாகாணத்தில் உள்ள மொத்த கள்,சாராயக் கடைகளை கணக்கெடுத்து அந்த எண்ணிக்கையை தாலுக்காக்கள்,சர்க்கிள்கள் தோரும் வருடம் கொஞ்சம்,கொஞ்சமாக குறைத்துவந்து ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இல்லாமல் போகும் படியாக செய்துவிட வேண்டும்.குடிகாரர்களை திடீரென்று ‘குடிப் பட்டினி’ போட்டால்,அவர்கள் திருட்டுத்தனமாய் அதை அடைய முயற்சிக்காமல் போக மாட்டார்கள்; இது இயற்கை”.
”சிலருக்கு குடிக்க அனுமதி கொடுத்து சிறிது,சிறிதாய் குறைத்து வரவேண்டும்.இல்லாவிட்டால் அவர்கள் எப்படியாவது குடிப்பார்கள்.அதற்கு இவ்வளவு விலை இல்லாமலும் இன்றுள்ளது போல் ஒரு இலாக்கா வைத்து குடியை பெருக்காமலும்,காங்கிரஸ்காரர்களை போல் தந்திரம் செய்யாமலும் சர்க்கார் மனப்பூர்வமாய் யோக்கியமாய் நடந்துகொள்ள வேண்டும்”, (குடியரசு தலையங்கம் 06.11.1943)
“சென்னை ராஜ்ஜியத்தில் மது விலக்கு முறையை தொடர்ந்து நடத்துவதென ஆச்சாரியார் ஆட்சி முடிவு செய்துவிட்டது”.
“100-க்கு 5 வீதமே படித்த மக்களாய் இருந்த நாம்-ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தப் பிறகு 100-க்கு 7 படித்த மக்களானோம்.அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜாஜி தாம் 1938-ல் பதவிக்கு வந்தவுடன் ’கல்வியை அன்றுள்ள தன்மைப்படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை.ஆதலால் வரவு-செலவை சரிகட்ட 2600 பள்ளிகளை மூட வேண்டியது அவசியமாகிவிட்டது’ என்பதாக ஒரு சாக்கு கண்டுபிடிக்க கருதியே ‘மது விலக்கினால் ஏற்பட்ட நட்டத்தை சரிக்கட்டினேன்’ என்று சொல்ல வசதி ஏற்படுத்திக்கொண்டார்”.
“அந்த மதுவிலக்கு ஏற்பாடு செய்த நாள் முதல் நாளதுவரைக்கும், அந்த மது விலக்கு காரணமாக அது குடிசை தொழிலாக மாறி,இன்று அது (குடி) ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவி வந்திருக்கிறது.
இந்த மது விலக்கினால் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்தபாடில்லை என்பதோடு,இதற்காக குடிகாரர்கள் செலவிடும் பணமும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்ததே அல்லாமல் குறையவில்லை என்பதோடு,முன்பு மதுக் கடைகளுக்கு சென்று வாங்கிக்குடித்தவர்களுக்கு இன்று அவர்கள் வீடு தேடி வந்து மது வினியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்த மது உற்பத்தி தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள்,நாணயமில்லாதவர்கள் பெருகிவருகிறார்கள்.இது மாத்திரமல்லாமல்,கீழ் நிலை போலிசு நண்பர்கள் அநேகர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி,நாணயம் கெட்டவர்களாகவும் ஆகிவருகிறார்கள்”.(விடுதலை தலையங்கம் 04.03.1967)
“நம்மை பொருத்தவரையில் கள்,சாராயம் முதலிய எவ்வகை மதுவையும் கையில் தொட்டது கூட கிடையாது.மலம் சாப்பிடுவதை விட மதுவருந்துவதை கேவலமாய் கருதி வருகிறோம்”.
”மதுபானக் கெடுதி ஒழிவது நல்லது என்பதில் சிறிதும் அபிப்பிராய பேதமில்லை.மதுபானத்தில் ஏற்படும் கேட்டை நன்றாய் உணர்ந்துதான் இருக்கிறோம்.ஆனால் மதுவிலக்கு என்னும் சாக்கில் பார்ப்பன ஆட்சி செய்யும் படுமோசத்தை நம்மால் சகிக்க முடியவில்லை”.(விடுதலை தலையங்கம் 24.10.1937)
தந்தை பெரியார் அவர்கள் தான் காங்கிரசில் இருந்து வெளியேறிய பிறகு மது விலக்கு பற்றிய தமது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்பதை குடியரசு இதழில் அவர் எழுதிய தலையங்கங்களில் இருந்து பார்த்தோம்.
·
இதில் எந்த ஒரு இடத்திலும் தான் காங்கிரசில் இருந்த போது மதுவினால் ஏற்படும் சமூகத் தீமைகள் பற்றி தான் கொண்டிருந்த கருத்தை மாற்றிக்கொண்டதாக அவர் கூறவில்லை.அதற்கு மாறாக காங்கிரசின் போலியான மது விலக்கைத்தான் எதிர்த்துள்ளார்.
· கல்வியில் பார்ப்பனர் அல்லாதோர் முன்னேறி விடக்கூடாது என்பதற்காக பார்ப்பன ராஜாஜி செய்த சூழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளார்.
· மது விலக்கை நடைமுறைப்படுத்தி,அதனால் ஏற்பட்ட இழப்பை காட்டி பள்ளிகளை இழுத்து மூடும் காங்கிரசு,கள்,சாராயம் விற்கும் சமூக விரோதிகளை சட்டசபை உறுப்பினர்களாகவும்,மந்திரிகளாவும் ஆக்கியதையும் சுட்டிக்காட்டி அம்பலப்படுத்துகிறார்.
· கள்ளுக்கடை மறியலை அறிவித்த காந்தி,தமிழகம் வந்த போது கள்,சாராயம் விற்கும் நபர்களின் வீட்டிலேயே தங்கியதையும் சுட்டிக்காட்டி, மது விலக்கு என்பது காங்கிரசின் இலக்கோ,நோக்கமோ அல்ல.கள்,சாராயம் குடித்து பார்ப்பனர் அல்லாதார் சீரழிந்து போக வேண்டும்.அதே வேளையில் அதே மது விலக்கை காரணம் காட்டி பார்ப்பனர் அல்லாதாரின் கல்வியை பாழாக்க வேண்டும் என்ற பார்ப்பன கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்பதுதான் தந்தைபெரியாரின் நோக்கமே தவிர குடியை ஆதரிப்பது அல்ல.
அரசு திட்டமிட்டு குடிகாரர்களை உருவாக்கிவிட்டு திடீரென அவர்களை ’குடிப்பட்டிணி’ போட்டால் அவர்கள் எப்படியாவது குடித்தே தீருவர்.எனவே குடியர்களை ஒரே நாளில் திருத்திவிட முடியாது.அவர்களை படிப்படியாகத்தான் அதில் இருந்து விடுவிக்க முடியும்.எனவே அதற்குரிய வழிமுறைகளை கூறுகிறாரே அன்றி குடிப்பதில் தவறில்லை என்று நமது தமிழக புரட்சியாளர்களை போன்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் பேசவோ,எழுதவோ இல்லை.
இதை நிரூபிக்கும் வகையில்தான் மலம் சாப்பிடுவதை விட மது அருந்துவதை தான் இழிவாக பார்ப்பதாக அவர் கூறியிருப்பதை நாம் கவனிக்க வேண்டும்.
மதுவிற்கு அடிமையானவர்களை அதில் இருந்து விடுவிப்பது எப்படி என்பதை பற்றி இயங்கியல் முறையில் ஆலோசனை தந்திருக்கிறாரே தவிர குடிப்பதை ஒருபோதும் அவர் ஆதரிக்கவில்லை.
அதே நேரத்தில் மது விவகாரத்தில் அரசின் தலையீட்டிற்கு பின்னர்தான் ’கள்’ போதை பொருளாகிவிட்டது, என்று வரையறுத்த தந்தை பெரியார் “காங்கிரசின் போலி மது விலக்கு முறையை சென்னை சர்க்கார்,வரப்போகும் வருடம் முதல் மாற்றிவிடக்கூடும் என்பதாக தெரிகிறது”,என்று கூறியதன் மூலம் அரசு பற்றிய தனது அறியாமையை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்.
அதாவது மதுவில் அரசு தலையிட்டதற்கான காரணம் அரசின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதோடு, மதுவிற்கு மக்களை அடிமையாக்கி அவர்களை சமூக அக்கறை அற்றாவர்களாக ஆக்குவதன் மூலம் மக்கள் அரசுக்கு எதிராக போராடாமல் செய்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதுவும்தான்.
இது அரசின் அடிப்படை நிலைப்பாடு.இதில் காங்கிரசு அரசு,காங்கிரசு அல்லாத அரசு என்ற வேறுபாடு ஏதுமில்லை.அரசு ,அரசாங்கம் ஆகியவற்றை பற்றிய பாமரத்தனமே பெரியாரின் மேற்கண்ட நிலைப்பாட்டிற்கு காரணமாகும்.
அரசு பற்றிய மேற்கண்ட பலவீனம் அவரிடம் இருந்ததே தவிர, மதுவினால் ஏற்படும் தீமைப்பற்றிய விவகாரத்தில் காங்கிரசில் இருந்த போதும் சரி அதில் இருந்து வெளியேறிய பிறகும் சரி அவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.அதற்கு மாறாக மேலும் அக்கருத்தை கூர்மையாக்கிக்கொண்டார்.
எனவே தனது ஆரம்ப கால மது விலக்கு பற்றிய கருத்தை பின்னாளில் மாற்றிக்கொண்டார் என்ற வாதம் அடிப்படை அற்றாதாகும்.இது தந்தை பெரியாரை பற்றிய புரிதலின்மை அல்லது தமது கருத்துக்கு ஏற்ப தந்தை பெரியாரின் கருத்தை வளைத்து, திரித்துக்கூறும் நயவஞ்சகமே அன்றி வேறல்ல!
தந்தை பெரியார் தனது இறுதி மூச்சுள்ள வரை தன்னுடைய ஒவ்வொரு அசைவிலும்,மூச்சிலும் தமிழ் சமூதாயத்துக்கு தான் தந்தை என்பதை நிரூபித்தவர் அவர். தயவு செய்து நமது தந்தையை கொச்சைப்படுத்தாதீர்கள். தொடரும்……………
தொடர்புடைய கட்டுரைகள்:

0 comments:
Post a Comment