மதுவிற்கு எதிராகவும், அதனால் சமூகத்தில் எப்படிப்பட்ட தீங்குகளும்,இழப்புகளும் ஏற்படுகிறது என்பது பற்றி அந்தக் காலத்திலேயே மிகவும் கூர்மையான பார்வையோடு,தகுந்த புள்ளி விவரங்களோடு தந்தை பெரியார் குடியரசு இதழில் 16.08.1925-ல் எழுதிய தலையங்கத்தை சென்றத் தொடரில் அப்படியே தந்தோம்.
பெரியாரின் மேற்கண்ட கட்டுரையைப்பற்றி பல வாசக நண்பர்கள் தங்கள் கருத்தை எம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளனர்.தந்தை பெரியார் அவர்கள் 1921-ம் ஆண்டுக்கு பிறகு, அதிலும் காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னர், மது விலக்கு பற்றிய தனது கருத்தை மாற்றிக்கொண்டுவிட்டதையும்,மது அருந்துவதை ஆதரித்து பேசியதையும்,எழுதியதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
அதிலும் ஒரு வாசகர் மது விலக்கு பற்றிய நிலைப்பாட்டில் தமிழக புரட்சிகர அமைப்பின் நிலைப்பாட்டை தான் ஆதரிப்பதாகவும்,பெரியாரைப்பற்றி ஆழமாக வாசிக்கும்படியும் எமக்கு அறிவுருத்தியிருக்கிறார்.
மேலும் ஒரு வாசகர் மது விலக்கு பிரச்சனையில் தந்தை பெரியாருடன் சிண்டு முனியும் சூறாவளியின் நோக்கம் என்ன? என்றும் வினவியிருக்கிறார்.
தந்தை பெரியாரும், புரட்சிகர அமைப்பும் சொல்லும் மது விலக்குக்கொள்கை சரியல்ல,என்றால் திரு ராமதாஸ் சொல்லும் மது விலக்கை முன்மொழிவீர்களா? அல்லது வேறு ஏதாவது இருக்குமா? என்றும் ஒரு நண்பர் கேட்டுள்ளார்.
சென்றத் தொடரில் மது விலக்கை ஆதரித்து தந்தை பெரியார் எழுதிய குடியரசு இதழ் தலையங்க கட்டுரையை வெளியிட்டு இருந்தோம்.இந்தத் தொடரில் மது விலக்கை எதிர்த்து குடியரசு இதழில் 04.03.1967-ல் தந்தை பெரியார் எழுதிய தலையங்க கட்டுரையை வெளியிடுகிறோம்.
மது பற்றிய விவகாரத்தில் தந்தை பெரியார் அதை ஆதரித்து எழுதியிருந்தாலும்,அல்லது அதை எதிர்த்து எழுதியிருந்தாலும், நாங்கள் குறிப்பிடும் புரட்சிகர அமைப்பின் நிலைப்பாடு சரியோ,தவறோ இதில் எதுவாக இருந்தாலும் எழுதியவரும்,நிலைப்பாடு எடுத்துள்ளவர்களும் அவர்கள் யார் என்பதைவிட, அவர்கள் எந்த மாதிரியான நிலைப்பாடு வைத்திருந்தார்கள்,வைத்திருக்கிறார்கள், அது பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கும், சமூக நலன்களுக்கும் ஏற்றதா? இல்லையா? அல்லது புதிதாக நாம் ஒரு சரியான நிலைப்பாட்டை உருவாக்க வேண்டுமா? என்பதை விவாதித்து முடிவு எடுப்பதே சூறாவளியின் நோக்கமாகும்.இதில் எமக்கு உள்நோக்கம் எதுவுமில்லை.
தந்தை பெரியார் எழுதிவிட்டார் என்பதால் அதை ஆதரிக்க வேண்டும் என்பதோ,தமிழக ’புரட்சிகர அமைப்பு’ ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது என்பதால் அது எதுவாக இருந்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று கருதுவதோ எந்த வகையுலும் சமூக அக்கறையுள்ளவர்களின் சிந்தனா முறையாக ஒருக்காலும் இருக்க முடியாது.
இந்த விடயத்தில் முழுமையானதொரு கட்டுரையை ஒரே முறையில் எழுதினால், அதில் எமது கருத்தும்,நிலைபாடும் என்ன என்பதை எம்மால் அறுதியிட்டு கூறிவிட முடியும்.
ஆனால் இப்போதோ இணையதளத்தின் தன்மைக்கு ஏற்ப, ஒவ்வொரு கட்டுரையையும் இரண்டொரு பக்கங்களில் எழுத வேண்டிய தேவையும்,அவசியமும் உள்ளது.ஏராளமான வாசகர்களை கட்டுரையை வாசிக்க வைப்பதும், ஆக்கபூர்வமாக விவாதத்தில் பங்கேற்க வைப்பதுமே எமது இலக்கும் நோக்கமும் ஆகும்.எனவே தற்போதைய இந்த வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏதும் எழவில்லை என்றே கருதுகிறோம்.
எமது இந்த நிலையை சிலர் தமக்கு சாதகமாகவோ அல்லது அவசரப்பட்டோ கருத்துகள் தெரிவிப்பதை கண்டு நாங்கள் வியப்படைய போவதில்லை.எமது நிலையை சிலர் தமக்கு சாதமாக பயன்படுத்தி கொள்வதையும் மற்றும் சிலர் பொறுமையின்றி கருத்துகள் கூறுவதையும் நாங்கள் அறிவோம்.இவைகள் நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.இதற்காக யார் மீதும் எமக்கு எவ்வித வருத்தமும் இல்லை.
எனவே எங்களது பணியை நாங்கள் தொடர்கிறோம்.மது விலக்கை எதிர்த்த தந்தை பெரியாரின் குடியரசு இதழ் தலையங்க்க்கட்டுரை இதோ..........
”நான் காங்கிரசைவிட்டு வந்தப் பிறகு,சுமார் 30 ஆண்டுகளாகவே இன்றுள்ள மதுவிலக்கு கொள்கைக்கு எதிரி.இதற்காக என்னை நான் மதுக் குடங்களை காவடிக்கட்டி சுமந்து நிற்கிற மாதிரி காங்கிரசுக்கு ஆதரவான பத்திரிக்கைகளில் கேலிச்சித்திரம் போட்டு கண்டித்து எழுதியுள்ளார்கள்.
நான் காங்கிரசு மது விலக்கை பற்றி எதிர்த்து குடியரசு இதழில் எழுதிய தலையங்கங்கள்,கட்டுரைகள் ஆகியவற்றில் காங்கிரசு மது விலக்கிற்கு உள்ளெண்ணம் கூட கண்டுபிடித்து எழுதியிருக்கிறேன்,பேசி வந்திருக்கிறேன்.
அந்த உள்ளெண்ணம் என்னவென்றால்,1938-ல் காங்கிரசு (இராஜாஜி) பதவிக்கு வந்த காலத்தில் நமது கல்வி வளர்ச்சியை ஒழித்துக்கட்டுவதற்கு ஒரு ஆதாரம் தேட வேண்டும் என்கிற எண்ணத்தின் மீது மது விலக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது என்று எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன்.அதாவது 100-க்கு 5 வீதமே படித்த மக்களாய் இருந்த நாம்-ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தப் பிறகு 100-க்கு 7 படித்த மக்களானோம்.அதைக் கண்டு ஆத்திரம் அடைந்த ராஜாஜி தாம் 1938-ல் பதவிக்கு வந்தவுடன் கல்வியை அன்று உள்ள தன்மை படி நடத்துவதானால் அரசாங்கத்திடம் போதிய பணமில்லை. ஆதலால் வரவு,செலவை சரிகட்ட 2600-பள்ளிகளை மூட வேண்டியது அவசியமாகிவிட்டது என்பதாக ஒரு சாக்கு கண்டுபிடிக்க கருதியே மது விலக்கினால் ஏற்பட்ட நட்டத்தை சரிகட்டினேன் என்று சொல்ல வசதி ஏற்படுத்திக்கொண்டார்.அது மது விலக்கினால் மது வரும்படித்தொகை பெருமளவிற்கு குறைந்து விட்டது என்று கூறிவிடலாம் என்பதாக கருதி ஏற்பாடு செய்தார்.ஆனால் மது விலக்கு ஏற்பாடு செய்த நாள் முதல் நாளது வரைக்கும் அந்த மதுவிலக்கு காரணமாக அது குடிசை தொழிலாக மாறி,இன்று அது (குடி) ஒரு பிரபுத்துவ நாகரிகமாகவே மக்களிடம் பரவி வந்திருக்கிறது.
இந்த மது விலக்கினால் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு சிறிதும் குறைந்த பாடில்லை என்பதோடு இதற்காக குடியர்கள் செலவிடும் பணமும் மற்றும் 50 முதல் 100 சதவீதம் உயர்ந்த்தே அல்லாமல் குறையவில்லை என்பதோடு,முன்பு மது கடைகளுக்கு சென்று வாங்கி குடித்தவர்களுக்கு இன்று அவர்கள் வீடு தேடி வந்து மது விநியோகம் ஆகும்படியான நிலை ஏற்பட்டிருக்கிறது.இந்த மது உற்பத்தி தொழில் மூலம் நாட்டில் அயோக்கியர்கள்,நாணயமில்லாதவர்கள் பெருகிவருகிறார்கள்.இது மாத்திரம் இல்லாமல் கிழ்நிலை போலிசு நண்பர்கள் அநேகர்கள் குடி பழக்கத்துக்கு ஆளாகி,நாணயம் கெட்டவர்களாகவும் ஆகிவருகிறார்கள்.
மற்றும்,இந்த மது உற்பத்தி காரணமாக அநேக அயோக்கியர்கள்,காலிகள் போலிசுக்கு நண்பர்களாக ஆகிவருகிறார்கள்.
இவற்றை எல்லாம் விட,குடியர்கள் உடல்நிலை மிக,மிக கேடடைந்து விடுகிறது.
மது அருந்தியதற்காக 5 சதவீதத்திற்கும் குறைவான பேர்கள்தாம் குற்றவாளிகளாக ஆக்கப்படுகிறார்கள்.மற்ற 95 சதவீதத்தினர் தாராளமாய் முறைப்படி அருந்திகொண்டே இருக்கிறார்கள்.
இன்னும் ,இவற்றுள் பல ரகசியமான கேடுகள் நிகழ்ந்து வருகின்றன. இன்று அரசாட்சி செய்ய ’மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு’ ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சியார் மதுவிலக்கு விசயத்தில் சில சீர்திருத்தம் செய்து மது விலக்கை நிலைநிறுத்துவோம்,தீவிரப்படுத்துவோம் என்பதாக கூறியிருப்பதாக தெரிகிறது.
இப்படி இவர்கள் கூறியிருப்பதற்கு காரணம் ராஜாஜியை திருப்திபடுத்த-அவருக்கு பயந்து கூறியிருக்கிறார்கள் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.
‘நம் மக்கள் சகல துறைகளிலும் கேடடைந்து சிலர் கெட்டு உழலவேண்டும் என்பதுதான் பார்ப்பனர் தர்மம். ஆதலால் எந்த நிலையிலும் பார்ப்பனர் நம் யாருக்குமே நல்வழிகாட்ட மாட்டார்கள்’
இந்த மது விலக்கு துறையில்,தேவைப்பட்டவர்களுகெல்லாம் மது கிடைக்கும்படியும், மதுவினால் உடலும்,புத்தியும் கெடாதபடியும் இருக்கத்தக்க வண்ணம் மது அனுமதிப்பு ஏற்படுத்தினால் சர்க்காருக்கு நல்ல வரும்படி ஏற்படுவதுடன் , பார்ப்பனர் தவிர்த்த மற்ற சகல துறைகளிலும் உள்ள மக்களில் நல்ல அளவுக்கு இந்த ஆட்சிக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் கருதுகிறேன்.
தொடரும்...........
(விடுதலை தலையங்கம் 04.03.1967)
தொடர்புடைய கட்டுரைகள்:

0 comments:
Post a Comment