இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகளாக இந்திய அரசு கூறிக்கொள்ளும் ஜம்முகாஷ்மீர், வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் தங்களை எப்போதுமே இந்தியர்கள் என்று ஒப்புக்கொண்டதில்லை. ஆனாலும் இந்திய அரசு தனது இராணுவபலத்தின் மூலம் இப்பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
தமிழக மக்கள் பார்ப்பனியத்தை தமது
பண்பாடாக ஏற்றுக்கொண்டிருந்தாலும், பார்ப்பனர்கள் தம்மை விட உயர்சாதியைச்
சேர்ந்தவர்கள் என்பதையும் ஒப்ப்புக்கொண்டிருந்தாலும், தமது அன்றாட வாழ்வில்
கடைபிடிக்கும் பண்பாட்டில் பார்ப்பன எதிர்ப்பு என்பதையும் உள்ளடக்கியே
வாழுகின்றனர். அதாவது நூற்றுக்கு நூறு பார்ப்பன அடிமைகளாக தம்மை அடையாளப்படுத்திக்
கொள்வதில்லை. அதிலும் குறிப்பாக பார்ப்பன சமஸ்கிருதத்தையும்,
சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியையும் ஏற்க வேண்டிய தேவையோ, அவசியமோ எழாத காரணத்தால்
அவைகளை எப்போதுமே நிராகரித்தே வந்துள்ளனர். இவைகள்தான் தமிழக மக்களை அடிமைகளாகவும்,
தமிழ்நாட்டை காலனியாகவும் இந்திய ஆட்சியாளர்களை வன்மத்தோடு பார்க்கத்தூண்டுகிறது.
இந்திய ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை,
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவும், அதன் ஓர் அங்கமாகவும் கருதாதன்
வெளிப்பாடுதான் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து துன்புறுத்தும்
நிகழ்வுகளில் இந்திய அரசின் அலட்சியமான நடவடிக்கைகள்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கை
அரசின் நிலைப்பாடும், இந்திய அரசின் நிலைப்பாடும் அச்சுப்பிசகாமல் ஒன்றாகவே
உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று இலங்கை கடற்பகுதியில் மீன்
பிடிக்கிறார்கள் என்பதே அதுவாகும்.
தற்போது தமிழ மீனவர்களை இலங்கை கடற்படை
கைது செய்யும் கடற்பகுதியில் இன்று நேற்றல்ல பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழக
மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வருகின்றனர். இதற்கு காரணம் இப்பகுதிகளில்
தான் மீன்கள் ஏராளமாக கிடைக்கின்றன. இப்பதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை
தடுப்பது அவர்களின் உயிர்வாழும் உரிமையையே மறுக்கும் செயலாகும்.
இந்திய அரசு இந்திராகாந்தி காலத்தில்
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோதே தமிழக மீனவர்களின் உயிர்வாழும்
உரிமையையும் பறித்துவிட்டதுதான் இலங்கையின் இப்போதைய நடவடிக்கைகளுக்கான மூலமாகும்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது
செய்யும் போதெல்லாம் கைதானவர்கள் தமது குடிமக்கள் என்ற சிந்தனையே இந்திய அரசுக்கு
இன்று வரை ஏற்பட்டதில்லை. இதை நிரூபிக்கும் ஆதாரத்தை இந்திய அரசின் நடவடிக்கைகளில்
இருந்தே நாம் உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதும்
அவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளில் இந்திய அரசு தானே ஈடுபட்டதில்லை.
தமிழக அரசும், தமிழக அரசியல் கட்சிகளும் நிர்ப்பந்தித்த பிறகுதான் இந்திய அரசு
இதில் தலையிடுகிறது.
இப்பிரச்சனை கடந்த இருபது
ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடந்து வந்தாலும் இந்திய அரசு இதை தீர்ப்பதற்கான
எந்த உருப்படியான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லை. நாட்டு மக்களை பாதுகாக்கும்
உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாறாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதால்
தான் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள் என்று கூறி இலங்கை அரசின்
நடவடிக்கையை இந்திய அரசு நியாயப்படுத்துகிறது.
இந்திய அரசின் காட்டிக் கொடுக்கும்
நடவடிக்கைகளால் துணிவு பெறும் இலங்கை தனது நடவடிக்கையை இடைவிடாது தொடர்கிறது.
கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறித்த
இந்திய அரசுதான் அவர்களுக்கு மாற்று வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்க வேண்டும்.
அப்படி ஒரு கடமை, பொருப்பு தனக்கு இருப்பதாகவே இந்திய அரசு கருதவில்லை. தனது
வாழ்வுக்கான மாற்று வாய்ப்பு ஏதும் இல்லாத போது
இப்போதைய தமது பாரம்பரிய வாழ்
உரிமையை பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு தான் ஆபத்து நிறைந்ததாக இருந்தாலும் அதை தொடருவதைத்
தவிர தமிழக மீனவர்களுக்கு வேறு வழியேயில்லை.ஒரு வேலை இலங்கை அரசின்
அடாவடித்தனத்துக்கு தமிழக மீனவர்கள் பணிந்துபோவது என்பது தற்கொலைக்கு ஒப்பான
செயலாகும்.
இந்திய அரசு தொடர்ச்சியாக தமிழக
மீனவர்களை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு தமிழக அரசியல் கட்சியினரும், தமிழக
அரசும் தங்களது பிழைப்புவாத நடவடிக்கைகளின் மூலம் துணைபோகின்றன.
கச்சத்தீவை ஒட்டிய பகுதிகளில் தமிழக
மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்தி தொடர்ச்சியான, விடாப்பிடியான
போராட்டங்களின் மூலம் இந்திய அரசை நிர்ப்பந்திக்காமல் தமிழக மீனவர்களை இலங்கை
கடற்படை கைது செய்யும்போது மட்டும் ஒரே விதமாக ஊளையிட்டு விட்டு இவர்கள் முடங்கிக்
கொள்கின்றனர். இதன் மூலம் இவர்கள் இந்திய அரசுக்கு எவ்வித நெருக்கடியும்
ஏற்படுத்தாமல் இந்தியா தனது வழமையான
அணுகுமுறையை தொடர்வதற்கு துணைபோகின்றனர்.
இதற்கு முன்பு வரை விடுதலைப் புலிகளை
காரணம் காட்டி இந்திய, இலங்கை அரசுகள் தமிழக மீனவர்கள் மீதான தத்தமது ஒடுக்குமுறையை
நியாயப்படுத்தின. ஆனால் இப்போது அப்படி சொல்லிக் கொள்வதற்கு காரணம் எதுவும்
இல்லாததால், இப்போதைய தமது ஒடுக்கு முறையை நியாயப்படுத்திக் கொள்வதற்கு புதிய
வகையிலான உத்தியை கையாள ஆரம்பித்துள்ளன.
”தமிழக மீனவர்களின் எல்லை தாண்டிய மீன் பிடிப்பால் அவர்களின் ஒன்று
விட்ட சகோதர்களான இலங்கை தமிழர்களே பாதிப்பிற்குள்ளாகின்றன”, என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் அண்மையில்
புதுடில்லியில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இலங்கை தூதரின் மேற்கண்ட கருத்து
பத்தோடு பதினொன்றாக நாம் கருதி விட முடியாது. இது மிகவும் தந்திரமான, ஆபத்தான
கருத்தாகும். தமிழ் நாட்டிலுள்ள
தமிழர்களும், ஈழத்தமிழர்களும் சிந்தனை ரீதியாகவும்,நடைமுறையிலும்
சகோதரர்களாகத்தான் இருந்து வருகின்றனர்.
இந்த இயல்பான உறவில் விரிசலை
ஏற்படுத்துவதற்கான தந்திர நடவடிக்கையாகவே இலங்கை தூதரின் கருத்து அமைந்துள்ளது.
இதனடிப்படையில் தமிழக, ஈழ மீனவர்களிடையே மோதலை உருவாக்கிவிட வாய்ப்புள்ளது. இதை
சாதிக்க ஈழத்தமிழ் மீனவர்களின் பேரில், தமிழக மீனவர்களின் மீது இலங்கை கடற்படை
வெறித்தனமான தாக்குதல் தொடுக்கவும் வாய்புள்ளது.
இந்திய அரசு முன்பு விடுதலைப் புலிகளை
அழித்தொழிக்க இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டதைப் போன்றே, இப்போது தமிழக
மீனவர்கள் மீதான தாக்குதல்களிலும் இலங்கை அரசோடு கைகோர்த்துக் கொள்ளும்
வாய்ப்பையும் நாம் நிராகரித்து விட முடியாது.
இதை எதிர்கொள்வதற்கும்,
முறியடிப்பதற்கும் நாம் இப்போதே தயாராகவேண்டும். ஆனால் தமிழ் நாட்டிலுள்ள அரசியல் கட்சியினர்
இதையும் தமது பிழைப்பிற்கான மற்றுமொரு வாய்பாக்கிக் கொள்வதை தடுக்கும் வகையிலான
உத்தியை உள்ளடக்கியதாக இத்தயாரிப்பு அமையவேண்டும்.
மொத்தத்தில் தமிழக மீனவர்கள் மீதான
இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கான மூலமும், முதன்மைக் குற்றவாளியும் இந்தியாதான்.எனவே
இலங்கை அரசின் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியாவிற்கு எதிரான போராட்டத்தை
தொடங்குவதுதான் தீர்வாகும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
1.கூடங்குளம்:ஆறப்போடு அணைந்துவிடும்!
4.கூடங்குளம்: திரு.உதயகுமாருடன் நேர்காணல். இடிந்தக்கரையில் இருந்து.
9.மல்லாந்து துப்பினால் மார்பில்......................பாகம்-I
10.மல்லாந்து துப்பினால் மார்பில்.......! (சங்ககாலம் கி.மு.200-கி.பி.250) பாகம்-II
11.களப்பிரர்கள் காலம்:தமிழக வரலாற்றில் உழைக்கும் மக்களின் பொற்காலம் மல்லாந்து துப்பினால் மார்பில்......................!பகுதி-III களப்பிரர்கள் காலம்



0 comments:
Post a Comment