சென்றத் தொடரில் மது அருந்துவது பற்றிய தந்தை பெரியாரின் போராட்டச்செய்தியையும்,தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஒரு அமைப்பின் நிலைப்பாட்டையும் வெளியிட்டிருந்தோம்.
இதில்”நமது நாட்டில் மது அருந்துவது சமூக பண்பாடாக இல்லாவிட்டாலும் குடிகாரர்களே அதிகம் உள்ளனர்.எனவே குடிப்பதை ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையாக பார்க்காமல்,சமூக,பொருளாதாரத்தில் வைத்து பார்க்க வேண்டும்.இதிலும் காரம் நிறைந்த மேலைநாட்டு மதுபானங்களை அருந்துவதை விட,நமது மரபான கள் போன்றவற்றை அருந்தலாம்”,என்று அந்த அமைப்பின் நிலைப்பாடு வரையறுக்கிறது.
மொத்தத்தில் இந்த நிலைப்பாடு மது அருந்துவதிலும் உள்நாட்டு மரபை உயர்த்தி பிடிக்கிறது.மேலும் இதை ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையாக பார்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறது.அதோடு இதை சமூக,பொருளாதாரத்தில் வைத்துப்பார்க்க வேண்டும் என்கிறது.
இப்படிக்கூறும் இந்த அமைப்பு, தான் கூறியபடியே இதை சமூக,பொருளாதாரத்தில் வைத்து பரிசீலித்து, அந்த பரிசீலினையின் அடிப்படையில் தான் வந்தடைந்த முடிவைத்தான்,அதாவது நமது மரபான கள் அருந்தலாம் என்று பரிந்துரைக்கிறதா? என்பதை அவர்கள் வெளியிட்டுள்ள கட்டுரையில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலவில்லை.
ஒருவேளை இந்தப்பணியை, அதாவது மது அருந்துவது பற்றி சமூக,பொருளாதாரத்தில் வைத்து பரிசீலிக்கும் வேலையை நம்மிடம் விட்டுவிட்டார்கள் போலும்!
ஒரு நிலைப்பாட்டை அறிவிப்பவர்கள், தாங்கள் அந்த நிலைப்பாட்டிற்கு வந்து அடைந்ததற்கான காரணிகளை தெரிவிப்பதற்கு கடைமை பட்டவர்கள்.ஆனால்,அவர்களோ அந்த பணியை நம்மிடம் தள்ளிவிட்டுள்ளனர்!
ஒருவேளை இன்றைய நிலையில் மது அருந்தும் நபர்களை பற்றிய அதிலும் குறிப்பாக ”மறு காலணியாக்கம் கடும் உழைப்பு நிறைந்த உதிரி தொழிலையும் அதிக பணிச்சுமையையும்,வீடு,குடும்பத்தை விட்டு நாடோடிகளாக அலையும் அகதி வாழ்க்கையையும் ஏற்படுத்தியிருக்கும் சூழலில் குடி என்பது எளிதில் ஆனால் கொஞ்சம் செலவில் கிடைக்கும் வலி நிவாரணியாக மாறுகிறது”.
”அவலத்தில் உழலும் வாழ்க்கையை உரிமைக்கான போராட்டத்தில் மாற்றுவது போய்
வலியை மறக்க குடிப்பது என்றாகிவிட்டது”, என்ற செய்தியே போதும் என்று கருதுகிறார்கள் போலும்.
நாம் மேற்கண்ட அவர்களின் செய்தியை வைத்தே இப்பிரச்சனையை பார்ப்போம்.
மறு காலணியாக்கத்தின் விளைவாக கடும் உழைப்பும், அகதி வாழ்க்கையும் உழைப்பாளர்களிடம் குடி என்பது அவர்களை எளிதில் பழகக்கூடியதாகி விடுகிறது என்கிறார்கள்.இந்த நிலைமை நீடிக்கும் வரை இதனால் அழுத்தத்திற்கு உள்ளாவோர் குடிப்பது தவீர்க்கவியலாதது.இந்த நிலைமை நீடிக்கும்வரை குடித்துக்கொண்டுதான் இருப்பார்கள். எனவே அவர்களை குடிக்க கூடாது என்று சொல்வதில் எவ்வித பயனுமில்லை.குடிக்காதே என்று கூறுவது சமூக பொருளாதாரத்தை அறியாதவர்களின் பிதற்றல். ஆகவே குடிக்காதே என்பது எதிர்விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். அதனால்தான் இதை ஒழுக்கம் சார்ந்த பிரச்சனையாக பார்க்கக் கூடாது.இதற்கு மாறாக ஆல்கஹால் குறைந்த அதாவது காரம் குறைந்த நமது மரபான கள் போன்றவற்றை அருந்த சிபாரிசு செய்திருக்கிறார்கள்.
நமது மரபு என்று கள் என்பதை மட்டும் இவர்கள் குறிப்பிட்டாலும் சாராயம் என்பதும் நமது மரபு என்பதால் மறைமுகமாக அதையும் சேர்த்துதான் இவர்கள் குடிக்கலாம் என்று சுபாரிசு செய்திருக்கிறார்கள்.
நமது மரபு என்று இவர்கள் கூறும் கள்ளை எதிர்த்து 1921-ம் ஆண்டு காங்கிரசு அறிவித்த போராட்டத்தை தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் நடத்திய வரலாற்றை தந்திருக்கிறோம்.
கள்ளுக்கடை மறியல் போராட்டம் காங்கிரசின் போராட்டமாக இருந்தாலும் இந்த போராட்டம் தமிழக அளவிலும் ஏன் இந்திய அளவிலும் கூட ஈரோட்டில் தந்தை பெரியாரை போன்று யாரும் தீவிரமாகவோ,உணர்வு பூர்வமாகவோ நடத்தியதற்கான வரலாற்று சுவடுகள் ஏதும் எமக்கு கிடைக்கவில்லை.
எனவே, இந்த கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தனித்துவத்தை நம்மால் அவதானிக்க முடிகிறது.தந்தை பெரியாரை கைது செய்துவிட்டால் இந்தப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்ற ஆங்கில ஆட்சியாளர்களின் எண்ணத்தை முறியடிக்கும் வகையில் போராட்டம் அதன் பிறகுதான் தீவிரம் அடைந்துள்ளது.
தந்தை பெரியாரின் கைதுக்குப் பின்னர் அவரின் சகோதரி,துணைவியார் ஆகியோரின் தலைமையில் பெண்கள் பெரும் கூட்டம், கூட்டமாக திரண்டு போராடி சிறைகளை நிரப்பினார்கள்.மேற்கண்ட செய்தியே கள் அன்றையை சமூகத்தில் ஏற்படுத்திய அவலத்தை,விளைவுகளை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
இதை மேலும் அழுத்தமாக விளக்கும் வகையில் 1925-ம் ஆண்டு குடியரசு இதழில் தந்தை பெரியார் எழுதிய தலையங்க கட்டுரையைக் கீழே தருகிறோம்
மதுபானம்.
1920-ஆம் வருஷம் சென்னை ராஜதானியில் உள்ள கள்ளுக்கடைகள் 11,034 இவைகளில் விற்ற கள்ளு 11 கோடி காலன்,8 திராம். புட்டி 1 க்கு 2 அணா விதம் 66 கோடி புட்டிக்கு கிரயம் ரூபாய் எட்டரை கோடி கிரையம் ஆகிறது.இதற்கு அனுகூலமாய் செலவாகும் மாமிசம்,புட்டு,தோசை,முட்டை முதலிய உப கருவிகளுக்கு 2 கோடி ரூபாய் ஆக ரூபாய் பத்தரை கோடி.
சென்னை ராஜதானியில் உள்ள சாராய கடைகள் 6352. இவைகளில் விற்ற சாராயம் 16,75,000 காலன்கள்.காலன் ஒன்றுக்கு 12 ரூபாய் வீதம் 2 கோடியே 1 லட்சம் ரூபாய்.இதற்கு மாமிசம், தோசை,புட்டு முதலிய உபகருவிகள் 25 லட்சம்.ஆக இரண்டும் சேர்த்து பன்னிரண்டரை கோடி ரூபாய் செலவாகிறது.
இந்தப் பன்னிரண்டரைக் கோடி ரூபாய் நமது ராஜதானியில் கள்,சாராயத்திற்கு ஆக மூன்றரை கோடி ஜனங்களால் செலவு செய்யப்படுகிறது.இது அல்லாமல் ஏழை மக்களால் குடியின் பொருட்டு களவு-சூது-பொய்-கொலை-கொள்ளை முதலிய காரியங்களுக்கு ஆகும் செலவு எவ்வளவு? கோர்ட்டுவக்கில்இலஞ்சம்,சப்ளை மாமூல் வகைகளில் ஆகும் செலவுகள் எவ்வளவு?
மக்கள் ஒழுக்கம்,கற்பு முதலிய குணங்கள் ஒழிந்து தேசத்திலும் நாட்டிலும் குடும்பத்திலும் ஏற்படும் கலகங்கள் ஒற்றுமை குறைவுகள் எவ்வளவு? இவைகளுக்கு விலை மதித்தால் எந்த கணக்கிலடக்க முடியும்? இவ்வளவு கொடுமைகளையும் செய்வித்து வரும்படிக்காக நமது சர்க்கார் நமது மாகாணத்தில் இதனால் சம்பாதிக்கும் பொருள் எவ்வளவு என்று கணக்கு பார்த்தால்-கள்ளில் 2 கோடியே 31 லட்சமும்,சாராயத்தில் 88 லட்சமும் ஆக 3 கோடி ரூபாய் 19 ½ லட்சம் ரூபாய்தான்.இதல்லாமல் கஞ்சா,அபினி,சீமைசாராயம் விற்கும் கணக்குகள் இதில் சேர்க்கப் படவில்லை.இதில் இருந்து சர்க்கார் 3 கோடி ரூபாய் சம்பாதிக்க ஜனங்கள் எவ்வளவு கஷ்டமும் நஷ்டமும் வருகிறது?
இதே மாதிரி இந்தியா முழுமைக்கும் 1923-1924 ஆம் வருஷத்திற்கு நமது சர்க்காருக்கு மது வியாபாரத்தில் வந்த ஆதாயம் 19,40,51,689 ரூபாய் சர்க்காருக்கு 19 ½ கோடி வரவேண்டுமானால்,பொது ஜனங்களுக்கு மேற்படி கணக்குப்படிக் கள்ளும் சாராயமும் குறைந்தது 80 கோடி ரூபாய்க்கு குறைவில்லாமல் விற்பனை ஆகியிருக்க வேண்டும்.இதற்கேற்ற மற்ற சடங்குகளின் செலவையும் சேர்த்து பார்த்தால் எவ்வளவு பெரிய தொகை.நாட்டின் ஷேமத்திற்கல்லாமல் நாட்டினுடையவும் ஒழுக்கத்தினுடையவும் அழிவுக்குச் செலவாகிறது என்பது விளங்கும்.சட்டசபை மெம்பர்கள் என்று சொல்லிக்கொள்வோரும்,மந்திரிகள் என்று சொல்லிக்கொள்வோரும் இதற்காக என்ன செய்திருக்கிறார்கள்? கேள்வி கேட்பதும்,பத்திரிக்கையில் எழுதிக்கொள்வதுமான காரியங்களைச் செய்து பொதுஜனங்களை ஏமாற்றிச் சர்க்காருக்கு அனுகூலம் செய்துகொண்டு வந்திருக்கிறார்களே அல்லாமல்,உண்மையில் யோக்கியமான வேலை எதுவும் செய்திருக்கிறார்களா?
சட்டசபையிலேயே குடிக்கும் மெம்பர் சில பேர்கள்;சாராயக் கடை குத்தகை எடுத்துப் பிழைக்கும் மெம்பர்கள் சில பேர்;கள்ளுக்கு மரம் குத்தகை விட்டு பணம் சம்பாதிக்கும் மெம்பர்கள் சிலபேர்; குடியினால் ஏற்படும் கொடுமைகளினால் பிழைப்பவர்கள் சிலபேர்; குடியை விளம்பரப்படுத்தி “நல்ல சாராயம்; டாக்டர் சிபார்சு செய்தது; உடம்புக்கு நல்லது”,என்று ஜனங்களைக் குடிக்கச் சொல்லி பிழைக்கும் மெம்பர்கள் சிலபேர்.இப்பேர் பட்ட சிகாமணிகளால் பெரும்பாலும் நிரப்பப்பட்ட சட்டசபை (இவைகளில் சம்பந்த படாத சிலபேர் இருக்கலாம்) ஜனங்களுடைய பிரதிநிதிசபை என்று இப்படிப்பட்டவர்களே பொது ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லி இவைகளை ஒழிப்பதாய் அங்குப் போய் உட்கார்ந்து கொண்டு தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் இனத்தாருக்கும் பிழைப்புக்கு உத்தியோகம் சம்பாதிக்க பாடுபடுவதல்லாமல் வேறு என்ன பலனை உண்டாக்குகிறார்கள்?
சட்டசபைகள் ஏற்பட்டு மதுபானத்தை ஒழிக்க நம்மவர்கள் பிரயத்தன பட்டதாக சொல்லிக்கொள்வதன் பெருமையைக் கீழ்க்கண்ட கணக்குகளால் தெரிந்துகொள்ளலாம்.ஜனப்பிரதிநிதிகள் பெரும்பாலும் உள்ள சட்டசபை இல்லாத காலத்தில் நமது சர்க்காருக்கு இந்தியாவில் கள்ளு,சாராயத்தால் வரும்படி :
அதாவது 1880-1881 வருஷத்தில் 3 ½ கோடி;
அதற்கு வேண்டிய இலாக்காக்கள் அமைத்து ஒழுங்கு படுத்தின பிறகும் சட்டசபை ஏற்பட்ட பிறகும் 6 கோடி ;
1910-ல் மிண்டோ – மார்லி சீர்த்திருத்தத்தின் பிறகு 10 கோடி;
1918-ம் வருஷத்தில் மாண்ட் – போர்ட் சீர்த்திருத்தத்தின் பிறகு 18 ½ கோடி;
1924-ம் வருஷத்தில் 19 ½ கோடி.
இப்படியே நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டு வருவதல்லாமல் குறைவு படுவதெங்கே? இதை நிறுத்தி விட வேண்டுமென்று சொன்னால் நமது சட்டசபை மெம்பர்களும்,மந்திரிகள் கூட இந்த வரும்படி போனால் சர்க்கார் நடைபெறாதே என்று விசனப்படுகிறார்களே அல்லாமல்,தேசமும் ஜனங்களும் கெட்டுபோகிறதே என்கிற கவலையே
இவர்களுக்கில்லை.தவிரவும் மது வரும்படி நின்றால் படிக்க பணம் இல்லையே என்று விசனப்படுகின்றார்கள்.இரண்டு பிள்ளை உள்ள தகப்பனை,உன் ஒரு பிள்ளை படிக்கவேண்டுமானால்,ஒரு பிள்ளை கள்ளு,சாராயம் குடிக்க வேண்டும்,சம்மதமா என்று கேட்டால் தகப்பன் ஒரு பிள்ளை குடித்தாலும் சரி,ஒரு பிள்ளை படிக்கத்தான் வேண்டும் என்று எவனாவது சொல்லுவானா? ஒருக்காலும் சொல்லமாட்டான்.
அதுபோலவே நமது மந்திரிகளும்,சட்டசபை மெம்பர்களும்-ஏழை மக்களும் தாங்களும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர் என்கிற உணர்ச்சி இருக்குமானால் வெகு காலத்திற்கு முன்பே இந்த மது வியாபாரத்தை சர்க்காரில் இருந்து ஒழித்திருப்பார்கள்.அல்லது சட்டசபையை விட்டு விலகியிருப்பார்கள். மது அருந்துபவர் பெரும்பாலும் ஏழைகள்.சட்டசபைக்கு போகிறவர்கள்,பணக்காரரும் மது அருந்துபவர்கள் கொடுக்கும் பணத்தால் படித்தவர்களாயுமிருப்பதால், மது பானமென்பது அவர்களுக்கு ஒரு கவலையற்ற விஷயமாயிருக்கிறது.’சட்டசபை பயித்தியம் இருக்கிறவர்கள் மற்றெல்லா விவகாரங்களையும் விட்டுவிட்டு மது விலக்கு என்கிற ஒரு காரியத்தில் மாத்திரம் தாங்கள் எல்லாரும் ஒன்றாயிருந்து,ஒரே அடியாய் இதை ஒழிப்பதுதான் தங்கள் வேலைத்திட்டம் என்கிற கொள்கையை வைத்துக்கொண்டு,சர்க்காரின் அதிகச்செலவை குறைத்து,கள்ளு வரும்படி இல்லாமலேயே சர்க்கார் நடக்கும் படியாக வரவு செலவு திட்டத்தைச் சரிசெய்துகொண்டு,இதை சர்க்காரை ஒப்புக்கொள்ள செய்வோம்; ஒப்புக்கொள்ளாவிட்டால் ராணுவச்சட்டம் வந்தாலும் சட்டசபையை வேறு காரியம் பார்க்க விடுவதில்லை என்று பிடிவாதம் செய்வதாக தீர்மானித்துக் கொண்டால் மதுபானம் நமது நாட்டில் இன்னும் ஒழியாமல் இருக்குமா? ஒருக்காலும் இருக்காது என்றுதான் சொல்லுவோம்.
கள்மரம் வளர்ப்பது நாம்; சாராயம் காய்ச்சுவது நாம்; குடிப்பது ஏழைகள்.யார் பெயரில் குற்றம் சொல்லுவது? மரம் வளர்த்து குத்தகைக்கு விட்டுக்,கடை எடுத்து கள்விற்று குடிகாரன் போதையில் செய்த காரியத்திற்கு கோர்ட்டில் ஏற்பட்ட வழக்குக்கு பீசு பெற்று வாழுபவர்கள் சட்டசபைக்கு போனால் சர்க்கார் பேரில் குற்றம் சொல்லி ஜனங்களை ஏமாற்றுவார்களே அல்லாமல் தங்கள் குற்றங்களை ஒருக்காலும் திருத்திக்கொள்ள மாட்டார்கள்.ஆகையால், யாராவது சட்டசபைக்கு போவதற்காக ஏழை மக்களிடத்தில் வந்து ஓட்டுகேட்பார்களானால் அவர்களைச் சட்டசபையில் நம்பிக்கையுள்ள ஓட்டர்கள் உங்களுக்கு எத்தனை தென்னை மரம்? அதில் எவ்வளவு கள்ளுக்கு அடைக்கப்பட்டிருக்கிறது? நீங்கள் எத்தனை குடிகாரர் கேசுக்கு ஆஜராகி எவ்வளவு பணம் சம்பாதித்தீர்கள்? குடி விலக்க நீங்கள் இந்த 6 வருஷ காலமாய் சட்டசபையிலும் வெளியிலும் என்ன செய்தீர்கள்? எங்களுக்கு வேறு ஒரு நன்மையும் வேண்டாம்.குடி ஒழிந்தால் போதும்.அதற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் சொல்வதை சர்க்கார் கேட்காவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று இம்மாதிரியான கேள்விகளைக் கேட்டு அதற்கேற்ற உண்மை யோக்கியர்களை ஆராய்ந்து பார்த்து ஓட்டர்கள் தங்கள் கடமையைச் சரியாய் செய்வார்களானால் மாத்திரம் சட்டசபையால் மதுபானம் ஒழிக்கலாம் என்று ஓட்டர்கள் நம்புவதற்கும்,மது பானம் ஒழியாவிட்டால் சர்க்கார் மீது குற்றம் சொல்லுவதற்கும் அர்த்தம் உண்டு.
(”குடி அரசு”,தலையங்கம், 16-8-1925)
மீண்டும் அடுத்தத் தொடரில் சந்திப்போம்…
.jpg)
0 comments:
Post a Comment